270
சாயங்கால மேகங்கள்
வழியில் சித்ரா தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை அவனுக்குத் தெரிவித்தாள். முத்தக்காள் மெஸ்ஸில் வரவு செலவைக் கவனித்துக் கொள்வதற்கு அவள் ஊரிலிருந்து வரவழைத்த பையன் நிறையப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டானாம்.” இதைச் சொல்லி விட்டுச் சித்ரா அப்போது அவனைக் கேட்டாள்:
“எவ்வளவு வற்புறுத்தினாலும் அந்த முத்தக்காளுக்கு மட்டும் மறுபடி உதவி செய்யப் போகக் கூடாது...”
“சித்ரா!. அந்த மனப்பான்மை சரியில்லை. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அதோ வானத்தின் மேற்கு மூலையில் பார்! பொன் நிறத்திலும், செந்நிறத்திலுமாகப் பல மேகக்குவியல்கள், திரள் திரளாக வேறு வேறு நிறம் காட்டி அழகு செய்கின்ற அந்தக் காட்சியை இரசிக்கலாம், ஆனால் அது தற்காலிகமானது. எந்த வகையிலும், பூமியில் இறங்கி மழையாகப் பெய்ய முடியாதது! மின்னி இடித்துக்கறுத்து இறுதியில் பூமியில் மழையாக இறங்கி மக்களை மகிழ்விக்கும் மழைமேகமாக நான் வாழ விரும்புகிறேன். முத்தக்காள் மறுபடி என்னிடம் உதவி கேட்டு வந்தால் நான் மறுக்க மாட்டேன். அவள் என் உதவியை விரும்பவில்லை என்றால் தலையிடவும் மாட்டேன்.”
“உங்களிடம் உள்ள பெரிய தொல்லை இதுதான்! உங்களால் ஒரு போதும் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது.”
“உலகில் முக்கால்வாசி மனிதர்கள் பிறர் பார்த்து இரசிக்கவும், வியக்கவும், மருளவும் மட்டுமே ஏற்ற சாயங்கால மேகங்களைப் போலத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் பிறர் பயன். பெறப் பெய்யும் மழைக்காலத்துக் கார்மேகங்களாக வாழ விரும்புவதில்லை --- நான் கார்மேகமாக இருக்கவே விரும்புகிறேன் சித்ரா! நீயும் அப்படி இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்."