பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

30

கொண்டு விடுகிறான். சிந்தித்துப் படிப்பதும் படித்துச் சிந்திப்பதும் போய்விட்டன, என்னைப்போல் நூல் வழங்கு நிலையம் நடத்துகிறவனுக்கு இது போதாத காலம் பூமி?”

வெறும் ஜனநாயகம் மட்டும் வளர்ந்து, அறிவும் சிந்தனையும் வளராமல் போவது ஒரு தேசத்தின் துரதிர்ஷ்டங்களில் எல்லாம் பெரிய துரதிர்ஷ்டம். அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படாத ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விட அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படுகிற சர்வாதிகாரமும் அடக்குமுறையும் கூட நல்லது என்று நினைக்கத் தோன்றி விட்டது” -- என்று பூமிநாதன் கூறியபோது அவன் குரலில் கடுமை ஏறியிருந்தது. கலை - இலக்கிய விஷயங்களில் பூமிக்கும் பரமசிவத்துக்கும் நடுவே கருத்து ஒற்றுமை இருந்தது. ஆகவே அந்த உரையாடலில் சுவை இருந்தது.

பூமியும் பரமசிவமும் பேசிக் கொண்டிருந்தபோதே பரமசிவத்தின் தம்பி முருகேசன், “அண்ணே ? அவங்க வந்திருந்தாங்க... இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க” என்று நான்காக மடிக்கப்பட்ட துண்டுக் கடிதம் ஒன்றைப் பரமசிவத்திடம் நீட்டினான்.

பரமசிவம் அதை வாங்கிப் பிரித்து படித்துவிட்டுப் பூமியின் பக்கமாகத் திரும்பி, “இன்றைக்கு எட்டு மணிக்கு டெலிவிஷன், பார்க்கணும்! இங்கே வழக்கமாகப் புஸ்தகம் எடுத்துப் படிக்கிற கஸ்டமர் ஒருத்தர் ‘படிக்கும் பழக்கம்’ என்கிற கலந்துரையாடல்லே பங்கு கொண்டு பேசறாங்களாம். முடியுமானால் நீயும் வரலாம” என்றான்.

“எங்கே போய்ப் பார்க்கணும்?”

“இங்கேதான் பக்கத்துல -- கருமாரி டி. வி. டீலர்ஸ்னு தெரிஞ்ச டெலிவிஷன் விற்பனைக் கடை ஒண்ணு இருக்கு. அங்கே போய்ப் பார்க்கலாம்.”