பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சாயங்கால மேகங்கள்

பூமிக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று பட்டதனால், பரமசிவத்தோடு சிறிது நேரம் செலவிடலாம் என்று தோன்றியது. தெருவில் வால்போஸ்டர் படிப்பது, தினசரியில் தலைப்புக்கள் படிப்பது தவிரப் பொறுமையாக எதையும் ஆர அமரப் படிக்கவே முடியாதபடி ஜனங்களின் இரசனையை எல்லாருமாகச் சேர்ந்து மந்தப்படுத்தி வைத்திருக்கிற காலத்தில் படிக்கும் பழக்கத்தைப் பற்றி டெலிவிஷனில் ஒரு கலந்துரையாடல் என்பதே புதுமையாயிருந்தது.

“நம்மூர் டெலிவிஷனில் அப்படியெல்லாம் உருப்படியான காரியங்களைக்கூட பண்ணுகிறார்களா என்ன? நம்பவே முடியவில்லையே! நான் சிறு வயதில் சிங்கப்பூர் டி. வி. யில் ஏராளமான பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் பரமசிவம்!”

“உன் சந்தேகம் நியாயமானதுதான் பூமி! டெலிவிஷன் என்றால் பிரபலஸ்தர்களின் மூஞ்சிகளைக் காண்பிக்க மட்டுமே அது ஏற்பட்டிருக்கிறது என்கிற ஓரம்சத் திட்டத்தில் செயல்படும் நமது டி. வி. யில் சமயா சமயங்களில் தவறிப்போய் இப்படிச் சில நல்ல நிகழ்ச்சிகளும் நேர்ந்துவிடுகின்றன”

இன்று நமது கலை இலக்கியத் துறைகளில் தவறுகள்தான் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. நல்லது தவறிப் போய் எங்காவது நேருகிறது. தவறுகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுவதில்லை. நல்லவைகள் முன்னேற்பாட்டோடு செய்யப்படுவதில்லை; தவிர்க்கப்படுகின்றன!”

“சத்ய விசுவாசமில்லாதவர்களின் எண்ணிக்கை கலை இலக்கியத் துறைகளில் அதிகமாயிருக்கிறது.”

“அப்படிப்பட்டவர்களின் தொகை இன்று எதில்தான் அதிகமாக இல்லை”

“சத்ய விசுவாசம், கடின உழைப்பு, வாக்கு நாணயம், தொழில் நாணயம் எல்லாம் உள்ளவர்கள் இன்று இடையூறாகக் கருதப்படுகிறார்கள்.