34
சாயங்கால மேகங்கள்
"அடடே! சித்ராவா?” என்று பூமி உற்சாகம் மேலிட்டுக் கூறவும், “சித்ராவை உனக்குத் தெரியுமா பூமி!” என்று பரமசிவம் வியப்போடு வினவினான். சித்ராவும் தானும் சந்திக்க நேர்ந்ததைச் சுருக்கமாகப் பரமசிவத்துக்கு விளக்கினான் பூமி.
கடைப் பெயரும், நடத்துபவர் பெயரும் சொல்லாமல், “எனக்குப் புத்தகம் தரும் லெண்டிங் லைப்ரரி உரிமையாளர் நல்ல இலக்கிய இரசனை உள்ளவர், தரமான படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதில் அவருக்கும் இருக்கும் ஆர்வம் இணையற்றது” என்று கலந்துரையாடலின் தொடக்கத் திலேயே குறிப்பிட்டாள் சித்ரா.
பூமி பரமசிவத்தைப் பெருமிதமாகப் பார்த்தான். கலந்துரையாடல் தொடர்ந்தது. சித்ராவே மேலும் விவரித்தாள்.
“சமீபத்தில் ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் என்னை வியப்பிலேயே மூழ்க அடித்துவிட்டார். சவாரி கிடைக்காத நேரங்களிலும், காத்திருக்கும் நேரங்களிலும் தான் படிப்பதற்கு வைத்திருப்பதாக நிரத்செளத்ரி, பாரதியார், ராஜா ராவ் போன்றவர்களின் நூல்களை ஸீட்டுக்கு அடியிலிருந்து எடுத்துக் காண்பித்த அந்தப் பட்டதாரி ஆட்டோ ரிக்ஷா டிரைவரைச் சந்தித்தபோது படிக்கும் பழக்கம் வளர்ந்து எல்லா மட்டங்களிலும் பரவியிருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தேன் நான்.”
பரமசிவம் பூமியின் பக்கம் திரும்பி மகிழ்ச்சியோடும் புன் முறுவலோடும் பார்த்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதும் சிரிப்பதும் . ஏனென்று புரியாமல், டி. வி. கடைக்காரர் குழம்பினார்.