உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

37

ஓட்டாமல் ஆட்டோவை வேறு ஒரு நண்பனிடம் விட்டிருந்தான் பூமி. வெறும் பணம் சம்பாதிக்கும் தொழில் என்பதற்காகவோ, வேறு வேலை எதுவும் கிடைக்காததாலோ மட்டும் அவன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுவயதிலிருந்தே மனிதர்களையும், அநுபவங்களையும் சந்திப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வமும் துறுதுறுப்பும் கூட ஒருவகையில் இதற்குக் காரணம்.

படித்துப் பட்டம் பெற்றும் ஆளை எதிரே பார்த்ததும் ‘இந்தத் தொழிலில் இவனா?’ என்று பார்க்கிறவனுக்கு எடுத்த எடுப்பில் ஒரு கணம் தோன்றக்கூடிய வித்தியாசமான உணர்வை உண்டாக்குகிறதோற்றமும் முகக்களையும் இருந்தும் கூட அந்தத் தொழிலை அவன் இரசித்துச் செய்து கொண்டிருந்தான். “ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில், பதிவு செய்துகொள்ள. வேண்டிய ஒரு புதிய பாடம்” என்றே தன்னை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் பூமி. கன்னையன் மிகவும் தயக்கத்தோடுதான் பூமியிடம் வந்து அதைத் தெரிவித்திருந்தான் என்றாலும், பூமி உடனே அதற்குச் சம்மதித்தான். ஒரு வார்த்தைகூடத் தட்டிச் சொல்லவில்லை.

“இரவே வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிடச் சொல்லு! என் வழக்கப்படி காலை முதல் இரயில் ஆன ஏர்க்காடு எக்ஸ்பிரசுக்குச் சவாரி தேடிக்கொண்டு போயாகணும்.”

“அத்தினி அவசரம் என்னாத்துக்கப்பா? ஆறு மணிக்குப் போனாப் போதுமே...”

“தாமதம் என்னுடைய முதல் எதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் கன்னையா? சுறுசுறுப்பில் மனிதன் சூரியனோடு போட்டி போட வேண்டும். பொழுது புலரத் தாமதமானாலும் ஆகலாம், ஆனால் இந்தப் பூமி எழுந்திருக்கத் தாமதமாகக் கூடாது!"