உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாயங்கால மேகங்கள்

39

தத்தில் இரண்டு மூன்று டாக்ஸிகளை விட்டு வளர்கிற அளவுக்கு மேலே வந்து திடீரென்று ஒரு விபத்தில் இறந்து போன டிரைவர் ஒருத்தருடைய மனைவிதான் அந்த மெஸ் சொந்தக்காரி. ‘முத்தக்காள்’ என்று பெயர். ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் ‘முத்தக்காள் மெஸ்’ என்று சொன்னால் சகஜமாகப் புரியும்.

உணவை முடித்துக்கொண்டு பணம் கொடுக்கிற இடத்தில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, “என்ன முத்தக்கா! செளககியமா? என்று விசாரித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், “இங்கே அரசியல் பேசுவதோ விவாதங்கள் செய்வதோ கூடாது” என்று புதிதாக ஒரு போர்டு அங்க தொங்கியது.

பூமி அந்த போர்டை நிமிர்ந்து பார்த்துப் படிப்பதைக் கவனித்து விட்ட முத்தக்காள், “ரெண்டு நாளைக்கு முன்னே சாப்பிட்டு விட்டுப் போறப்போ யாரோ நாலுபேர் அரசியல் சர்ச்சையில் இறங்கி அது. தீவிரமாகி இங்கேயே ஒருத்தரைக் கத்தியாலே குத்திப்பிட்டாங்க....... போலீஸ் விசாரணை, சாட்சி, அது இதுன்னு எல்லாத் தலைவலியும் முடிஞ்சு இன்னிக்குத்தான் இங்கே நிம்மதியா உக்காந்திருக்கேன் தம்பீ!” என்று அந்தப் போர்டு அங்கே வந்த காரணத்தை அவனுக்கு விளக்கினாள் முத்தக்காள். நெற்றியில் வெளேரென்று திருநீற்றுப் பூச்சும், வெள்ளைப் புடவையுமாக முத்தக்காளைப் பார்த்ததும் ஒரு விநாடி காலஞ்சென்ற தன் தாயின். நினைவு வந்தது அவனுக்கு.

“ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் முத்தக்கா! பேச ஆரம்பித்தாலே அது கத்திக்குத்திலோ, கலகத்திலோதான் போய் முடியும் என்கிற அளவு இந்நாட்டு அரசியல் இன்று மிகவும் கேவலமாக மாறிவிட்டது” என்று அவளிடம் கூறிக்கொண்டே அங்கிருந்து வெளியேறியிருந்தான் பூமி.

இரவு இரண்டு மணிக்குக் குமார் வந்து எழுப்பி வண்டியை வெளியே விட்டிருக்கிற விவரம் சொல்லிச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போனான்.