சாயங்கால மேகங்கள்
41
பக்கம் திரும்பி, “நீ பாலாஜி நகருக்கே விடுப்பா...பரவாயில்லை” என்றார் அவர்.
‘எந்தச் சித்ரா?’ பூமியின் மனத்தில் வியப்புடன் ஓர் இனிய சந்தேகம் எழுந்தது. ஆட்டோ கிளம்பிற்று.
சவாரியைப் பாலாஜி நகரில் இறக்கி விட்டபோது கூடப் பூமியினால் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இறங்கியதுமே சவாரி வாடகையும் கொடுத்து அதற்கு மேலும் ஒரு ரூபாய் போட்டுத் தந்து கணக்குத் தீர்த்துவிட்டார்... “பரவாயில்லை! இனாம் வேண்டாம்” என்று ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டான் பூமி. ஆனால் புறப்படுகிறவரை புதிர் விடுபடவில்லை.
பிற்பகல் 3 மணிக்கு அவன் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போனபோது பரமசிவமே சித்ராவைப் பார்க்கப் போக வேண்டும் என்று பூமியைக் கூப்பிட்டான். இருவரும் ஆட்டோவிலேயே அங்கு போனபோது காலையில் தான் சவாரி இறக்கிவிட்ட அதே வீடுதான் சித்ராவின் வீடு என்று பூமிக்குத் தெரிந்தது.
அவனும் பரமசிவமும் உள்ளே போனபோது சித்ராவுடன் அவள் வயதை ஒத்த வேறு ஒரு பெண் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளோடு வேலை பார்க்கும் சக ஆசிரியையாக இருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தது.
முகமலர்ச்சியோடு வரவேற்று பரமசிவத்தையும், பூமியையும் உட்காரச் சொல்லி உபசரித்தாள் சித்ரா, சிநேகிதிக்கு இவர்களை அறிமுகப்படுத்தினாள்.
அவளே காபி கலந்துகொண்டு வந்து தந்தாள். தான் காக்கி யூனிஃபார்மில் இருந்ததால் பூமிக்கு என்னவோ போல் இருந்தது. சித்ரா வித்யாசமில்லாமல் பழகுவதாகத் தோன்றினாலும் அவனுள் மட்டும் ஏதோ ஒரு குறுகுறுப்பு நிலவியது.