சாயங்கால மேகங்கள்
45
பூமி அதைத் தெரிவித்த முறை சித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சிரமங்களைத் தீர்த்துக் கொள்ளுவற்காக ஒற்றுமை, சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்காக ஒற்றுமை என்று அவன் அதைப் பாகுபடுத்திய, பேசிய அழகை அவள் ரசித்தாள். நாட்டில் சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் சீக்கிரம் ஏற்பட்டு விடுவதும் சிரமங்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் ஏற்படாமலே தட்டிப் போவதும் ஏனென்று விளங்காமல் சிந்தித்தாள் சித்ரா. படித்தவர்களையும், அரை குறையாகப் படித்தவர்களையும் ஏதாவது ஓர் அமைப்பின் கீழ் ஒன்று சேர்ப்பது எவ்வளவு தூரம் சாத்தியமற்ற காரியமாக இருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
பேச்சு சித்ராவின் டெலிவிஷன் கலந்துரையாடலைப் பற்றித் திரும்பியது. பரமசிவம் அவளை நோக்கிக் கேட்டான்.
“டெலிவிஷன்லே உங்க கலந்துரையாடல் நல்லாத்தான் இருந்திச்சு. ஆனாலும் ஒரு கருத்தை நீங்க இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கணும்! இரண்டு ரூபாய் கொடுத்து முதல்தரமான ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தயங்குகிறவன் ஆறு ரூபாய் செலவழித்து மூன்றாந்தரமான ஒரு சினிமாவுக்குப் போகத் தயங்குவதில்லை. மரத்தின் தயவில் தான் வளரும் புல்லுருவியைப் போல வேறு பல கலைகளின் செலவில் வேறு பல தரமான கலைகளை நலியச் செய்து விட்டுத் தான் மட்டுமே அடித்துப் பிடித்து அசுர் வேகத்தில் வளரும் ஆதிக்கக் குணம் இங்கே சினிமாவுக்கு இருக்கிறதே...?”
“சொன்னேன். ஆனால் ரிஹர்ஸல்லே சொல்றப்பவே டெலிவிஷன் ப்ரொட்யூஸர் அதைச் சொல்லக் கூடாதுன்னு தடுத்துவிட்டார். நாங்க டி. வி. லே ‘கான்ட்ரவர்ஸி ‘எதுவும் வராமப் பார்த்துக்கணும் அம்மா! ‘வாரத்துக்கு ரெண்டு முறை சினிமா வேறே ஒளிபரப்பறோம். சினிமாக் காரங்கள்ளாம் சண்டைக்கு வந்திடுவாங்க” -- ன்னு சொல்லிக் கெஞ்சினார்.