வந்திருந்தார். அவசர அவசரமாத் துக்கம் கேட்டானதும் மத்தியானம் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸில் மறுபடி ஊர் திரும்பிப் போயிட்டார். அவரோட அபிப்பிராயம், நான் மாம்பலத்திலேயே ஸ்கூலுக்குப் பக்கத்திலே இடம் பார்த்து குடியேறிட்டாப் போக்குவரத்துச் செலவாவது மிச்சப்படும் என்கிறதுதான்.”
“அதுவும் நல்ல யோசனைதான்!”
“ஆனால் எனக்கென்னவோ வேலைபார்க்கிற இடத்துக்குப் பக்கத்திலே குடியிருக்கப் போறது அவ்வளவாகப் பிடிக்கலே. அதே ஏரியாவிலே குடியிருந்தா, ஈவினிங் ஸ்கூல் விட்டதும் டியூஷன் எடுக்கணும்பாங்க. டியூஷனுக்காக வாங்கற பணத்திலே கால் பங்குகூட நமக்குத் தரமாட்டாங்க. அதுக்கு பதிலா நாமே நாலு இடத்திலே தனியா டியூஷன் எடுத்தாவீட்டு வாடகையாவது தேறும்...”
“உங்களுக்கு மாம்பலம். போறதுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம். நான் இங்கேயே பார்த்து ஏற்பாடு செய்கிறேன். நாளைக்குச் சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேரே புறப்பட்டு, வந்து லஸ் முனையில் நாகேஸ்வரராவ் பார்க் முகப்பில், அஞ்சரை மணிக்கு நில்லுங்கள். நான் அங்கே வந்து என் ஆட்டோவிலேயே அழைத்துச்சென்று வீடு காண்பிக்கிறேன்.”
“சரியாக அஞ்சரை என்று உறுதி சொல்ல முடியாது. பஸ் கிடைக்கணும். அஞ்சரையிலிருந்து ஆறு மணிக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்"என்றாள் சித்ரா.
பூமியும் அதற்குச் சம்மதித்தான்.
“நல்ல வீடாகப் பார்த்துக் குடுப்பா"என்று பரமசிவம் மீண்டும் சிபாரிசு செய்தான். சிறிது நேரத்தில் இருவரும் சித்ராவிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.
மறுநாள் சொல்லியபடி ஐந்து மணிக்கெல்லாம் லஸ்ஸில் போய் நின்றுவிட்டான் பூமி. தெரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் சொல்லி ஆட்டோவை அங்கே நிறுத்திவிட்டு