பிரியத்துக்குரிய வாசக நண்பர்களே!
‘சாயங்கால மேகங்கள்’ என்ற இந்நாவலின் கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள். மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்து விட முடியாது தான்.
ஆனால் அப்படிக் குணமுள்ளவர்களை நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது.
ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒருவகையில் நமது ‘சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்’ என்றே உங்களுக்கு நான் அறிமுகப் படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவு தான்.
‘நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்’ என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிக்கையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்
அறியாமையும் சுயநலமும் பதவி-பணத் தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பேயாகப் பிடித்து ஆட்டுவதால் நாமும் அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை.