48
சாயங்கால மேகங்கள்
வீட்டிற்குப்போய் வழக்கமான காக்கி யூனிஃபார்மிலிருந்து விடுபட்டு மாறுதலான, உடையுடன் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே போய்க் காத்திருந்தான் அவன். சித்ரா இன்னும் வரவில்லை.
சித்ரா ஐந்தே முக்காலுக்குத்தான் வந்தாள். முதலில் அவன் நின்று கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று --காக்கியூனிஃபார்ம் இல்லாமல் அவன் சாதாரண உடையில் நின்றது, இன்னொன்று ஆட்டோவை பங்க்கில் நிறுத்திவிட்டு அவன் மட்டும் தனியாக வந்து நின்றது. பூமிதான் முதலில் அவளருகே சென்று பேச்சுக் கொடுத்தான்.
“போகலாமா? ஆட்டோவை எதிர்ப்பக்கம் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருக்கிறேன். எடுத்துக்கொண்டு வருகிறேன் அதுவரை இங்கேயே நில்லுங்கள்.”
“ஓ? நீங்களா! அடையாளமே தெரியவில்லையே இந்த உடையில் இப்போது உடனே புறப்பட வேண்டாம், ஆறரை மணி வரை நல்ல நேரம் இல்லை. இங்கேயே பார்க்கில் உட்கார்ந்து, ஆறரை வரை நேரத்தைக் கடத்திவிட்டு அப்புறம் புறப்படலாம்"என்றாள் சித்ரா.
அவள் தனியாக இருக்க விரும்புகிறாளா, தன்னையும் உடன் கூப்பிடுகிறாளா என்று புரியாததால் பூமி தயங்கினான்.
“வாருங்கள்! உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்"அவளே அவனைக் கூப்பிட்டாள்.
பூங்காவில் அதிகக் கூட்டமில்லாத புல்வெளிப் பகுதியில் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். நர்ஸரி பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு சங்கம் அமைப்பது பற்றிய பேச்சை மீண்டும் அவளே ஆரம்பித்தாள். தொடர்ந்து பல விஷயங்களைப் பேசினார்கள். இருவரும் இடம் விட்டு விலகித்தான் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அப்போது பேசிய கருத்துக்களில் இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் இருந்தது. அந்த நெருக்கத்தை அவர்களே உணர்ந்திருந்தனர்.