50
சாயங்கால மேகங்கள்
சமையலறையையும், முன் பகுதியையும் இணைக்க நிலைப்படி இருந்தது. கதவு இல்லை. முன் பகுதியில் சுவர்களில் இரண்டு அலமாரி, மேலே ஒரு பரண் ஆகிய வசதிகள் இருந்தன. தண்ணீர், குளியலறை வசதிகள் எல்லாம் வீட்டில் கீழ்ப்பகுதியில் இருந்த அத்தனை போர்ஷன்காரர்களுக்கும் பொதுவாக அமைந்திருந்தன. வீட்டுக்காரர் மாத வாடகை ரூபாய் நூற்றைம்பது வீதம் ஆறு மாத முன் பணம் கேட்டார். அந்த இடம் ரூபாய் நூற்று இருபதுதான் பெறும் என்று பூமி அபிப்பிராய்ப் பட்டான்.
தனியாகக் குடி இருக்கப் போகிற தன்னைப் போன்ற ஒரு திருமணமாகாத பெண்ணுக்குப் பல குடும்பப் பெண்கள் சேர்ந்திருக்கும் அந்த வீடு மிகவும் ஒத்து வரும் என்பதால் சித்ராவுக்கு அதை விட்டுவிட விருப்பமில்லை. அட்வான்ஸை மட்டும் மூன்று மாதமாகக் குறைத்தால் தேவலை என்று வீட்டுக்காரரிடம் பேசி பார்த்தாள் அவள். வீட்டுக்காரர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். கடைசியில் வேறு வழியில்லாமல் வீட்டுக்காரர் சொன்ன நிபந்தனைக்கெல்லாம் சம்மதித்து முன் பணம் எழுதிக் கொடுப்பதற்காகக் கைப்பையிலிருந்து அவள் செக் புத்தகத்தை எடுத்தாள்.
“செக் வாங்கிக்கிற வழக்கமில்லை! ரொக்கம்தான் வேணும். பரவாயில்லே, நீங்க நாளைக் கலம்பரக் குடுத்தாக் கூடப் போதும்” என்று வீட்டுக்காரர் ‘செக்’ வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார்.
அப்போது வேறு எதுவும் செய்ய முடியாததால் மறுநாள் காலை பாங்கு திறக்கிற நேரம் வரை காத்திருந்து பணம் எடுத்துக் கொண்டு போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதாயிற்று. அட்வான்ஸ் கொடுக்கிற நேரத்துக்குப் பூமியும் உடன் இருக்க வேண்டும் என்று சித்ரா முதல் நாளே கூறியிருந்ததனால் கடற்கரை எஸ்டேட்டில் ஒரு சவாரியை இறக்கி விட்டுக் காலை பத்தே முக்கால் மணி சுமாருக்கு அப்பர் சாமி கோயில் தெருவுக்குப் போனான் பூமி. கடற்கரை எஸ்டேட்டி-