சாயங்கால மேகங்கள்
51
லிருந்து லஸ்ஸுக்கோ, மயிலாப்பூருக்கோ சவாரி எதுவும் கிடைக்காததால் காலியாக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வர வேண்டியிருந்தது.
பூமிதான் முதலில் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருந்தான். நிறையப் பேர் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பதாகவும், காலை பதினொரு மணிக்குள் யார் வந்து வாடகை முன் பணம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் வாங்கிவிடப் போவதாகவும் பூமியிடம் பயமுறுத்தினார் வீட்டுக்காரர்.
நல்ல வேளையாகச் சித்ரா பத்தே முக்காலுக்குள்ளேயே வந்து விட்டாள். அவள் தனியாகவே வருவாள் என்று பூமி எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அன்று பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டு சென்ற அந்த சஃபாரி சூட் இளைஞனையும் உடன் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
சவாரி தேடுவதையும் விட்டுவிட்டு அத்தனை சிரத்தையோடு சரியான நேரத்துக்குத்தான் அங்கே வந்திருக்க வேண்டாமோ என்று இப்போது பூமிக்குத் தோன்றியது. அவளை அவனோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்ததால் இப்படி ஒரு விரக்தி தனக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க முயன்றான் பூமி. தவிர்ப்பது சிரமமாயிருந்தது. காரண காரியவாதங்களையும் மீறி நின்றது அந்த விரக்தி.
முழுமையாகத் தொளாயிரம் ரூபாயை வாடகை முன் பணமாக வாங்கிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களை ஒரு முறைக்கு இருமுறை கவனமாக எண்ணிப் பார்த்தபின், “என்னிக்கு வர்ரதா உத்தேசம்?” என்று சித்ராவை நோக்கி கேட்டார் அந்த வீட்டுக்காரர்.
“வர்ர முதல் தேதியிலிருந்து கணக்கு வச்சுக்கலாம்” என்றாள் சித்ரா.தயக்கத்தோடு அவள் மேலும் கேட்டாள்.
“ரசீது...?”
“வழக்கமில்லை ...”