உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சாயங்கால மேகங்கள்

"இன்னொரு நாள் பேசலாம்! நான் சவாரி தேடிப் போகணும்” என்று வெளியே நின்ற தன் ஆட்டோவைச் சுட்டிக் காட்டினான் பூமி. அதுவரை ஒன்றும் சொல்லாமல் இருந்த சித்ரா, “இவர் செல்ஃப் எம்பளாய்மெண்ட் ஸ்கீம்லே தானே ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டறாரு. இந்த நகரிலுள்ள ஒரே பட்டதாரி ஆட்டோ டிரைவர்...” என்று பூமியைப் பற்றி விவரித்தாள்.

“பரவாயில்லை! ஆட்டோ இங்கேயே நிற்கட்டும். நாம் மூணு பேரும் என் காரிலேயே ஹோட்டல் சோழா வரை போய்விட்டு வந்துடலாம்” என்றான் புரட்சிமித்திரன்.

“மன்னிக்கணும்! இங்கே மெயின் ரோடிலேயே நிறைய ரெஸ்டாரெண்டெல்லாம் இருக்குதே?”

“ஐ ஹேட் தெம் லைக் எனிதிங்! தெருவோரத்து ஹோட்டல்களிலே ஒரே அழுக்கு மயமா இருக்கும்! பரிமாறுகிறவங்களும் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிடறவங்களும் டர்ட்டியா இருந்தா எனக்குக் குமட்டிக்கிட்டு வரும் சார்!”

அழுக்குகளையும் அழுக்கு நிறைந்தவர்களையுமே வெறுத்து ஒதுங்குகிற, ஒதுக்குகிற அந்த சவர்லே இம்பாலா புரட்சிக்காரனை விநோதமாகப் பார்த்தான் பூமி. அவனுக்கு ஏளனமாய் இருந்தது. “டீயோ காபியோ குடிக்கலாம்! ஆனால் ஒரு. நிபந்தனை.! நீங்களும், சித்ராவும் என் ஆட்டோவிலே உட்கார்ந்தால் நானே அழைத்துப் போய் டீ வாங்கிக் குடுத்து இங்கே திருப்பிக் கொண்டு வந்து விட்டு விடுவேன்” என்றான்

“எங்கே?” என்றான் புரட்சிமித்திரன்.

“எனக்குப் பிடித்த ஹோட்டலுக்கு” என்றான் பூமி. ‘வா நரேஷ்! போகலாம்’ என்று அவனையும் வற்புறுத்தினாள் சித்ரா. அவனை அவள் புரட்சிமித்திரன் என அழைக்காமல் நரசிம்மன் என்ற பெயரைச் சுருக்கினாற் போல் நரேஷ் என்றே அழைத்தாள். சித்ரா தன் பக்கம் பேசியது பூமிக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது..