உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'மன்னாரு’ மாஃபியா போன்ற மாஃபியாக் கும்பலிலிருந்து சமூகத்தையும், தனிமனிதர்களையும் காப்பாற்றப் பூமியும் சித்ராவும் மட்டுமில்லாமல் நாமும் கூடச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது.

கதையில் அவர்கள் போராடுகிறார்கள், வாழ்வில் நாம் போராடுகிறோம். வித்தியாசம் அதுவே.

சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறி விட்டது. இனி அவற்றைத் துணித்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும், மனத்தாலும் முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே ‘பூமி’ இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழமுடியாது. தீரர்களே வாழமுடியும்.

முன்பு தின்மணிக்கதிரில் தொடராக வந்த இந்த நாவலை இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் நூல் வடிவில் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் இங்கே கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தீபம்
சென்னை நா. பார்த்தசாரதி
27-8-’83