உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சாயங்கால மேகங்கள்

வரிசையில் வந்து அமர்ந்துவிட்டார்கள். பூமிக்கு முதலில் இது தெரியாது. தற்செயலாக வெளியே என்ன கூட்டம் கூடியிருக்கிறது என்று பார்ப்பதற்காக அரங்கின் திரையை விலக்கி எட்டிப் பார்த்தபோது முதல் வரிசையில் சித்ராவையும் அவள் தோழியையும் கண்டான். அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போது முன்னைவிட அதிக மகிழ்ச்சியும் பெருமிதமும் பூமிக்கு ஏற்பட்டன. தன்னுடைய கராத்தே நிகழ்ச்சி அந்த விழாவில் இடம் பெற்றிருப்பது தெரிந்து தான் சித்ராவும் அவள் தோழியும் வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா என்பது பூமிக்குப் புரியவில்லை. கராத்தே உடையில் பூமியும் அவனுடைய உதவியாளனும் மேடையில் தோன்றி திரை விலகியபோது எல்லாரையும் போல் சித்ராவும் அவள் தோழியும்கூட உற்சாகமாகக் கைதட்டினார்கள். பூமி மேடையில் இருந்தபடியே அதைக் கவனிக்கத் தவறவில்லை. சித்ராவையும் அவள் தோழியையும் பூமியிடம் தவிர அந்தக் கலையைக் கற்கும் வேறு பலரும் அவையில் ஆர்வமாக அமர்ந்திருந்தார்கள். பள்ளி நிர்வாகி பூமியையும் அவனுடைய சீடனையும் வரவேற்றுக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

முதல் பத்து நிமிஷங்கள் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவற்றின் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளையும் அவற்றில் உள்ள, பல்வேறு, ஸ்கூல்களையும் ஸ்டைல்களையும் சுருக்கமாக விளக்கினான் பூமி.

கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் ஆகியவற்றையே சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போலப் பயன்படுத்திக் காட்டும் கராத்தே தத்துவத்தைச் சொல்லிச் செய்து காட்ட முற்பட்டான்.

செங்கல் உடைத்தல், கட்டையை உடைத்தல் ஆகியவற்றைச் செய்து காட்டிய துரிதகதியைக் கண்டு கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. விரல்களிலும் மண்டையிலும் பாதங்களிலும் ஒருவன் அவ்வளவு வலிமையைக் குவிக்க முடியுமா. என்பது அனைவரின் ஆச்சரியமாகவும் இருந்தது.