பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாயங்கால மேகங்கள்
61
 

"மிகவும் பொருத்தமான விளக்கம்.”

“இன்னொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள்! ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங்கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம்பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையுமே போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும்கூட இரவல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு ‘டெமான்ஸ்டிரேட்’ செய்து காட்டினான் பூமி.

சித்ராவும், தேவகியும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது பூமி கேட்டான்:

“எப்பொழுது புது வீட்டுக்குக் குடி வரப்போகிறீர்கள்?”

“இன்னும் முடிவாகவில்லை! அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்” -என்றாள் சித்ரா.


9

விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழிமறித்து கொள்ளைக் காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியும் மில்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்கு பெயர் வசூல்.