அவள் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள், ஆட்டோ கிளம்பியது. அடுத்த கால் மணி நேரத்தில் ஆட்டோ நாகேஸ்வரராவ் பூங்காவின் முன்னால் போய் நின்றது.
“என்னைப் பொறுத்த வரை இந்தப் ‘பார்க்’ இல்லை என்றாள் மயிலாப்பூரே இல்லை” என்றான் பூமி.
“ஆமாம்? வெங்கட் நாராயணா ரோடில் உள்ள பார்க்கையும் இந்தப் பார்க்கையும் விட்டால் இந்த ஊரிலேயே வேறு நல்ல பார்க்குகள் கிடையாது.”
அவளை இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை உரிய இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டான் பூமி.
உள்ளே புல் வெளியில் அதிகக் கூட்டமில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்து நெடுநேரம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சித்ராவும் அவனும் இலட்சியம் முதல் அரசியல் வரை சகல எல்லைகளிலும் உரையாடினார்கள். சித்ரா ஒரு யோசனை சொன்னாள்:
“நேரமாகிவிட்டது. இனிமேல் நான் வீட்டில் போய்ச் சமைக்க முடியாது. நீங்களும் வாருங்கள்! இங்கேயே ஏதாவது நல்ல ஹோட்டலாகப் பார்த்து இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு போய்விடலாம்.”.
பூமி உடனே அவளுக்கு முத்தக்காள் மெஸ்ஸைப் பற்றியும் அதன் வீட்டுப்பாங்கான சமையல் தரத்தைப் பற்றியும் சொன்னான். அவளும் ஒப்புக் கொண்டாள். இரவு எட்டு அல்லது எட்டரை மணிக்கு மேல் போனால் முத்தக்காள் மெஸ்ஸில் கூட்டம் குறைந்துவிடும். அதுவரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் போகலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள் அவர்கள்.
முத்தக்காள் மெஸ்ஸில் முன்கூடத்தில் மேஜை நாற்காலி எல்லாம் உண்டு என்றாலும் உள்ளே ஓர் அறையில் பந்திப் பாய் விரித்து நாலைந்து பேர் தரையில் சம்பிரதாயமாக உட்கார்ந்து சாப்பிடவும் வசதி இருந்தது. இந்த உட்கார்ந்து