66
சாயங்கால மேகங்கள்
சாப்பிடுகிற வசதி மூலம் வீட்டுப் பாங்கான மெஸ் சாப்பாட்டை மேலும் வீட்டுப் பாங்கானதாக்கிக் கொள்ள முடியும் என்பது பூமியின் கருத்து. ஆனால் அவன் எப்போது மெஸ்ஸுக்கு வந்தாலும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற அந்தரங்க அறையையே விரும்புவது வழக்கம்.
இந்த விவரங்களைப் பூமி சொல்லக் கேட்டபின் சித்ராவும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற இடத்தையே விரும்பினாள். அவர்கள் அங்கே சாப்பிடப் போய்ச் சேர்ந்தபோது கூட்டம் குறைந்து முத்தக்காள் சாவகாசமாக இருந்தாள். “வா தம்பி?” என்று பூமியை வாய் நிறைய வரவேற்றாள் முத்தக்காள். பூமி சித்ராவைப் பற்றி முத்தக்காளுக்கு எல்லா விவரமும் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான். முத்தக்காள் அவர்களை மிகவும் பிரியமாக அமர வைத்துத் தானே உணவு பரிமாறினாள்.
“கலியாண விருந்துக்கு உக்கார வைக்கிற மாதிரி உங்களை உக்கார வச்சிருந்தாலும் இங்கே பரிமாறுகிற சாப்பாடு என்னமோ காய்ச்சல்காரனுக்குச் சமைச்ச மாதிரி பத்தியச் சாப்பாடுதான்” என்று நடுவே முத்தக்காளே பணிவாகச் சொல்லிக்கொண்டாள். ஆனால் பூமி அதை உடனே மறுத்துவிட்டான்.”
“மற்றவிதமான சாப்பாடுதான் இந்த ஊரில் எங்கே வேண்டுமானாலும் கிடைக்குமே முத்தக்கா! இந்தமாதிரிக் கமகமன்னு மணக்கிற. மணத்தக்காளி வற்றல் குழம்புக்காகவும், ஜீரகரசத்துக்காகவும் தானே இங்கே உன்னைத் தேடி - வருகிறோம்?”
“அதெல்லாம் உனக்குத் தெரியும்ப்பா ! நீ சொல்றே... இந்தத் தங்கச்சி மொத மொதலா வருது. தப்பா நினைச்சுக்கப் போகுது. அதுக்காவத்தான் நான் சொல்றேன்” என்று சித்ராவைப் பார்த்துச் சொன்னாள் முத்தக்காள்.
“எனக்கும் இந்த மாதிரி ஹோம்லி மீல்ஸுன்னா ரொம்பப் பிடிக்கும்” என்றாள் சித்ரா.