சாயங்கால மேகங்கள்
67
அந்தச் சமயத்தில் வெளியே தேடிப் பார்த்துவிட்டு முத்தக்காளை காணாமல் ஏமாந்த இரண்டு மூன்று பேர் அவளைத் தேடி உட்பக்கமாக அந்த அறை. வாயிலுக்கு வந்து நின்றார்கள். பீப்பாய் மாதிரி முன்னால் துருத்திய வயிறும் தோளிலிருந்து தரை வரை தொங்கும் துண்டுமாக ஒரு மீசைக்காரர் கையில் நோட்டுப் புத்தகம் பேனா சகிதம் மற்றவர்களுக்குத் தலைமை வகித்து வந்த மாதிரி அங்கே அட்டகாசமாக எதிரே வந்து நின்றார். அதிகார தோரணையில் வினவினார்;
“இந்த ஹோட்டல் ஓனரு யாரு?”
“ஏன்! நான்தான்! உங்களுக்கு என்ன வேணும்?”
“இந்தாம்மா! நம்ம தலைவருக்கு மணிவிழா வருது! அவருக்கு எடைக்கு எடை வெள்ளி குடுக்கிறதா முடிவு பண்ணியிருக்கிறோம். இந்த வார்டிலே வசூல் நடக்குது, வெத்திலை பாக்குக்கடை, பெட்டிக்கடை, பிளாட்பாரம் கடை எல்லாரும் வசூலுக்குக் குடுத்திருக்காங்க.”
“இந்த மெஸ்ஸை வியாபாரத்துக்காகவோ, லாபத்துக்காகவோ நான் நடத்தலீங்க. என் புருசன் இந்தப் பேட்டையிலே டாக்ஸி ஓட்டிக்கிட்டிருந்திச்சு. என்னை நிராதரவா விட்டிட்டு அது போனப்புறம் இந்த வட்டாரத்து டாக்ஸி ஆட்டோ டிரைவருங்க யோசனைப்படி நான் இந்த மெஸ்ஸை நடத்திக்கிட்டிருக்கிறேன். வசூலுக்கெல்லாம் தர்ர மாதிரித் தொழிலா இதை நான் நடத்தலே.”
“அப்படிச் சொல்லக் கூடாது! தந்தாகணும், தலைவர் மனசு வச்சா இந்த மெஸ்ஸையே நீங்க இங்கே நடத்த முடியாமல் பண்ணிடுவாரு! ஜாக்கிரதை.”
இதுவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இலையைப் பார்த்துக் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பூமி தலை நிமிர்ந்தான். வந்தவனைக் கேட்டான்.
“நீ யாருப்பா ?”