பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
சாயங்கால மேகங்கள்
 

"நான்தான் மணிவிழாச் செயலாளன் மறவை மதியழகன்.”

“சொந்தக் கையாலே உழைச்சுப் பிழைக்கணும்னு இங்கே ஒரு விதவைக்கு இருக்கிற சுயமரியாதை கூட உனக்கு இல்லியே! வசூல்னு பிச்சைக்கு வர்ர மாதிரி வந்து நிக்கிறியே அப்பா!” என்று பூமி கூறியதும், “நீ யாரு அதைக் கேக்க? வெளியிலே வா உன்னைப் பேசிக்கிறன்” என்பதாகச் சீறினான் மறவை மதியழகன். அவனும் பிறரும் வெளியேறிய பின் பூமி சித்ராவை நோக்கிச் சொன்னான்.

“விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழிமறித்துக் கொள்ளைக்காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியும் இல்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்குப் பெயர் வசூல்."”

“விளக்கு மாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சலம் என்கிற மாதிரித்தான்.” இது சித்ரா.

“நீ சும்மா இரு தம்பீ! உனக்கு எதுக்கு இந்த வம்பு?” என்று பூமியை அந்தக் சண்டையில் ஈடுபடவிடாமல் விலக்க முயன்றாள் முத்தக்காள்.

“எங்களைப் போன்ற டிரைவர்களுக்காகத்தானே நீங்கள் இந்த மெஸ்ஸையே நடத்துகிறீர்கள்? உங்களுக்கு வரும் பகை எங்கள் பகைதான்” என்று கூறியபடியே எழுந்து கைகழுவி விட்டு வெளியே அவர்களைத் தேடிச் சென்றான் பூமி.

வெளிப்புறம் மற்றவை மதியகழன் கும்பல் அவனைப் பந்தாடிவிடும் வெறியுடன் கொக்கரித்துக் காத்துக் கொண்டிருந்தது.