பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சாயங்கால மேகங்கள்

அவள் எதிரே தற்செயலாகக் குப்பன் பையனும், கண்னையனும் எதிர்பட்டார்கள். சித்ரா அவர்களிடமே விசாரித்தாள். நடு இரவில் வந்து போலீசார் கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைக் கைது செய்து கொண்டு போனார்கள் என்ற விவரம் அவர்களிடமிருந்து தெரிந்தது. டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் யூனியனின் காரியதரிசியையும், ஓர் அரசியல் பிரமுகரையும் அழைத்துக் கொண்டு பூமியை ஜாமீனில் விடுவித்துக் கொண்டு வருவதற்காகத்தான் அவர்கள் அப்போது போய்க் கொண்டிருந்தார்கள்.

சிந்தித்த போது, சித்ராவுக்கு ஒரு கணம் தயக்கமாகவும், கூச்சமாகவும் கூட இருந்தது, தான் அப்படி நெருக்கமும், அடையாளமும் காட்டிப் பூமியோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு அவனைத் தேடிப் போலீஸ் நிலையத்துக்குப் போவது சரியா என்று யோசித்தாள் அவள். பேச்சுக்கும், கவனத்துக்கும். வதந்திகளுக்கும் இடமாகப் போகிற ஒரு காரியத்தைத் தன்னைப் போல் திருமணமாகாத ஓர் இளம்பெண் செய்யலாமா என்ற தயக்கம் மேலெழுந்தவாரியாகத் தோன்றி உடனே மறைந்து விட்டது.

பூமியைப் பார்ப்பதற்காகவே அரை நாள் லீவு போட்டு விட்டுப் புறப்பட்டு வந்து இப்போது திரும்பிப் போவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. அவள் அப்போது அவர்களோடு போலீஸ் நிலையத்திற்குச் சென்றாள். மெய்யான அன்பினால் தூண்டப் பெற்று எழும் உணர்ச்சியை எந்த மேலோட்டமான போலித் தயக்கமும் தடுத்துவிட முடியாது என்பதற்கு அவளே உதாரணமாகியிருந்தாள்.

போலீஸ் நிலைய வாயிலில் சாலையை மறித்துக் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான ஆட்டோ, டாக்ஸிகள் நின்று கொண்டிருந்தன. போக்குவரத்துச் சாலையின் இரு முனைகளிலும் நெடுந்தூரத்துக்கு ஸ்தம்பித்துப் போயிருந்தது. பூமி என்ற வலிமை வாய்ந்த இளைஞனுக்குப் பின் பலமாயிருந்த மாபெரும் சக்தி தெரிந்தது.. ஒற்றுமையும் நியாய் உணர்ச்சி-