உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் இருந்தால் சாதாரணமாக மக்களால் யாரையும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க முடியும் என்பது கண்முன்னே நிதரிசனமாகத் தெரிந்தது.

உடன் வந்தவர்களோடு அவள் போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள் நுழைந்த போது இரு போலீஸ்காரர்களுக்கு நடுவே பூமி உள்ளே கூட்டிக் கொண்டு போகப்படுவதைப் பார்த்தாள். அவள் உள்ளே வருவதைப் பூமியும் பார்த்து விட்டான். முகமலர்ச்சியோடு அவளை நோக்கிக் கையை அசைத்தான் அவன்.

தான் அங்கு வந்திருப்பதை அவன் பார்த்து விட்டதில் அவள் மனம் திருப்தியடைந்தது. தான் வராவிட்டாலும் அவளைக் கவனித்து அவனுக்காகக் கவலைப்பட்டு, அவனை விடுவித்து அழைத்துச் செல்வதற்காக ஒரு பெரிய தோழமையுள்ள கூட்டம் அங்கே காத்திருப்பதைக் கண்டு அவளுக்குப் பெருமையாயிருந்தது.

அந்தச் சமயத்தில் பூமியைப் பற்றியும், அவளைப் பற்றியும் ஒரு விவரமும் தெரியாத யாரோ ஓர் அப்பாவி அவளிடமே வந்து, “நீ அந்த ஆளோட வூட்டுக்காரியாம்மா?” என்று வேறு கேட்டு விட்டான்.

சித்ராவுக்கு குப்பென்று பதட்டமும், வெட்கமுமாக முகம் சிவந்துவிட்டது. இப்படிக் கேட்டுவிட்டு எதிரே நின்றவனிடம் ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் இல்லையென்றும் சொல்ல முடியாமல் திகைத்து மலைத்துப் போய் நின்றாள் அவள்.

“இந்தம்மாவைப் பார்க்கப் பாவமா இருக்குதுப்பா” என்று பக்கத்தில் நின்ற வேறொருவர் பக்கம் திரும்பிச் சொல்லி அனுதாபப் பட்டுக்கொண்டான் அந்த ஆள்.

அறியாமையாலும், அளவுக்கதிகமான கற்பனை உணர்ச்சியாலும் அந்த ஆள் அப்படிச் சொல்லியதில் கூட உள்ளத்தின் அடி மூலையில் அவளுக்கு மகிழ்ச்சியாகவும், குறு குறுப்பாகவும் இருந்தது.