78
சாயங்கால மேகங்கள்
அங்கே போலீஸ் நிலையத்தில் கூடி நின்ற கூட்டத்திலிருந்து சித்ராவுக்கு மேலும் சில தகவல்கள் தானாகவே தெரிந்தன.
‘இதையெல்லாம் போய் பெரிது படுத்துவானேன்’ என்ற மெத்தனத்தில் முத்தக்காள் தன் மெஸ்ஸில் புகுந்து நிதி வசூல் என்ற பெயரில் கலாட்டா செய்ய முயன்றவர்களைப் பற்றிப் போலீஸில் புகார் எதுவும் கொடுக்காமல் மெத்தனமாக இருந்து விட்டாள்.
அதனால் தற்காப்புக்காக பூமி தன்னுடைய கராத்தே திறமையால் அவர்களைத் துரத்தி அடித்தவுடன் அவர்கள் முந்திக்கொண்டு போய்ப் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். தாங்கள் வசூலுக்குப்போய் முத்தக்காளை வற்புறுத்திப் பணம் கேட்டதையும், அதனால் தகராறு மூண்டதையும் அறவே மறைத்து விட்டுச் சாப்பிடுவற்காகப் போன இடத்தில் பூமியை ஏவி விட்டுத் தங்களைத் தாக்கியதாகப் போலீசில் புகார் கொடுத்து விட்டார்கள் அவர்கள்.
போலீஸார் அதன் விளைவாக இரவோடு இரவாகப் பூமியைத் தேடிச் சென்றதோடு முத்தக்காள் மெஸ்ஸையும் ‘ரெய்டு’ என்ற பேரில் பந்தாடியிருந்தார்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீட்டாலும், ஆலோசனையாலும் காரியங்கள் முத்தக்காளுக்கும் பூமிக்கும் எதிராகவே நடந்திருந்தன.
பொது மக்களின் நண்பனாகவும் சட்ட நியாயங்களின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டிய போலீஸ் அரசியல் செல்வாக்குள்ள சுரண்டல் பேர்வழிகளின் கையாள்களாகப் பயன்படும் நிலைமை வந்தால் அதைப் போல் மோசமானது வேறெதுவும் இல்லை. சுய நலமும்,. சுரண்டலும் வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான் ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை. தனிமனிதர்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிக்கலாம்: