சாயங்கால மேகங்கள்
85
பள்ளிக்குப் போக வேண்டிய நேரம் ஆகியிருந்தது. பஸ் பிடித்துப் போனால் சரியாயிருக்கும் என்றாள் அவள். அரை நாள் லீவுதான் போட்டிருக்கோம் என்பது வேறு நினைவுக்கு வந்தது அவளுக்கு.
“என் கூட வீடு வரை வந்தால் ஆட்டோவிலேயே கொண்டு போய் விட்டு விடலாம்” என்றான் பூமி. அவள் பஸ்ஸிலேயே போய்க் கொள்வதாகச் சொல்லி விட்டாள். அவளை அனுப்பி விட்டுப் பூமி மைலாப்பூர் சென்றான். ஆட்டோவைக் கன்னையன் மூலம் வேறு ஓர் ஆள் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து அனுப்பி விட்டு வீட்டுக்குள் சென்று தன்னுடைய சேவிங்ஸ் பாஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு லஸ் முனையிலிருந்த பாங்கின் அந்தப் பகுதிக் கிளைக்குச் சென்றான்.
பாங்க் கிளையலுவலகத்தின் முகப்பில் புரட்சிமித்திரனின் படகுக் கார் நின்று கொண்டிருந்தது. கார் ஏ.ஸி செய்யப் பட்டு மங்கலான குளிர்ச்சிக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
பூமி காரைக் கடந்து மேலே பாங்கின் வாசலுக்காகப் படியேறியபோது கையில் ஒரு கற்றை புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் புரட்சிமித்திரன் படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.
பூமியை எதிரே பார்த்ததும் அவன் பிடித்துக்கொண்டு விட்டான்:
“நான் கொடுத்த இதழ்களைப் படிச்சீங்களா? என் புதுக்கவிதைங்க எல்லாம் எப்பிடி? உங்களைப் பார்க்கவே முடியலியே? லெட்டராவது போடுவீங்கன்னு பார்த்தேன், அதுவும் போடலே...”
அதைக் கேட்டுப் பூமிக்கு எரிச்சலாயிருந்தது. நிஜமாகவே பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளித்துக்கொண்டு திணறும் தன் போன்ற கடின உழைப்பாளிகளிடம் பிரச்னைகளைப் பற்றிய பிரசங்கங்களிலும் கவிதைகளிலும் காலம் கடத்துகிற