உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாயங்கால மேகங்கள்

87

நேரே மெஸ்ஸுக்குப் போனான், வேலையாட்களை ஒன்று சேர்த்து மறுநாள் காலையிலேயே மெஸ்ஸில் அடுப்புப் புகைய வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சீரமைப்புப் பணிகளில் இறங்கினான்.

முத்தக்காள் மேல் அநுதாபமுள்ள வேறு பல டிரைவர்களும் உடலுழைப்பை இலவசமாகத் தர முன் வந்தனர். புதிய சாமான்கள் வாங்கப்பட்டு ஸ்டோர் ரூம் நிறைக்கப்பட்டது. இடிந்த பகுதிகள் இரவோடிரவாகச் சரி செய்யப்பட்டன. வாசலில் மறுநாள் காலையிலிருந்து மெஸ் வழக்கம் போல் நடக்கும் என்று பெரிதாக போர்டு எழுதி வைக்கப்பட்டது. புதுப்பானைகள், சட்டிகள், பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

பூமி அன்றிரவு வீட்டுக்குப் போகவே இல்லை. மாவரைப்பவரைத் தூண்டி வேலைகளைக் கவனிக்கச் செய்தான். உடைந்த மேஜை நாற்காலிகளில் செப்பஞ் செய்ய முடிந்தவற்றைச் செப்பஞ் செய்தும் அறவே உடைந்து போனவற்றிற்குப் பதிலாகப் புதிது வாங்கிப் போட்டும் ஏற்பாடுகள் செய்தான்.

அந்த மெஸ்ஸின் வாழ்க்கையோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்த பலர் பூமியோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்தனர். முத்தக்காள் என்ற தனி ஒருத்திக்கு வந்த துயரமாக அதை அவர்கள் நினைக்கவில்லை. தங்களுக்கே வந்த துயரமாக’ எண்ணிச் சீர் செய்தனர். புதிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர்.

எல்லா வேலைகளும் முடிந்த போது அதிகாலை மூன்று மணி. ஒரு மணி நேரம் கண்ணயர முடிந்தது. ஆனால் அதிக உழைப்பின் காரணமாக உறக்க வேளை தப்பிய பின் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. டாக்ஸி ஆட்டோ டிரைவர்களுக்குப் பயன்படுவதாக இருந்ததினால் காலை ஐந்து மணிக்கே மெஸ்ஸில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது.

பூமி கல்லாவில் உட்கார்ந்து வியாபாரம் செய்தான். மற்றவர்களோடு பரிமாறவும் செய்தான். பார்சல் கட்டினான். அன்று பிற்பகல் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ்