சாயங்கால மேகங்கள்
7
"படித்துப் பட்டம் பெற்றவராக இருந்தால் பணம் வாங்கி கொள்வது தப்பா? மீட்டரில் ஆன தொகையைக் கேட்டு வாங்கிக் கொண்டீர்களே, அது போல் தானே இதுவும்?”
“மீட்டர் ஆட்டோவுக்குத்தான்! உதவி, நன்றி. விசுவாசம் இதற்கெல்லாம் மீட்டரும், ரேட்டும் கிடையாது, கூடாது...”
“நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள், சொல்கிறீர்கள். உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன், ஆனால் உண்மையில் இந்த நகரத்தில் நீங்கள் குறிப்பிட்ட நல்லுணர்வுகளுக்கும் கூட மீட்டர், ரேட் எல்லாம் ஏற்பட்டு விட்டன.”
அவன் சிரித்தான். துணிந்து அவளைப் பேர் சொல்லி அழைத்துப் பேசினான்.
“மிஸ் சித்ரா! உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது! உங்கள் புன்னகையில் கவிதை இருக்கிறது. அவையே எனக்குப் போதும்.”
இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் அழகுகாட்டுவது போல் முகத்தைக் கோணிக் கொண்டு அவனை உறுத்துப் பார்த்தாள் சித்ரா. சினிமாக் காதலன் போல் அவன் ரெடி மேடாகப் பேசுவதாய் அவளுக்குத் தோன்றியது.
“உங்கள் குரலையும் வார்த்தைகளையும் கேட்கக் கொடுத்து வைத்த இந்த கான்வென்ட் குழந்தைகள் பாக்கியசாலிகள்.”
“உங்கள் உ.தவிக்கு நன்றி. ‘பிரேயர் பெல்’ அடித்து விட்டார்கள். நான் உள்ளே போக வேண்டும்.”
சித்ரா அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவனிடமிருந்து கத்தரித்தாற் போல் அவசர அவசரமாக விலக்கிக். கொண்டு பள்ளியின் உள்ளே சென்றாள்.
சுற்றிலும் எல்.கே.ஜி. யு.கே.ஜி. பட்டுப் பூச்சிகளாகக் குழந்தைகள் நிறைந்த மைதானத்தை நோக்கி அவள் செல்கிற வனப்பில் சிறிது நேரம் திளைத்து நின்றான் பூமிநாதன். காலை வேளையில் வாய்த்த அழகிய சவாரியும், அவள் மறந்து