உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தச் சில நாட்களில் அவன் ஆட்டோ பக்கமே போகவில்லை. எடுத்துக் கொண்ட சவாலை ஏற்று வெற்றியாக்கிக் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் பூமி பம்பரமாகச் சுறுசுறுப்புடன் உழைத்தான். நடுவில் ஒருநாள் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கூட வந்து பார்த்து விட்டுப் போனார்.

“உண்மையான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் செய்து காட்ட முடியும் பூமி! இன்று இந்த நாட்டில் உழைக்க முடியாத உழைக்க நினைக்காதவர்களை விட உழைக்க வேண்டும் என்று நினைக்கவே சோம்பல் படுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். செயலுக்குச் சோம்புகிறவர்களை விடச் செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச்சதை போல் வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை உன் அருகில் கூட அண்டவிடாதே” என்று பூமியை அக்கறையோடு எச்சரித்துவிட்டுப் போயிருந்தான் பரமசிவம்.

பயிற்சி வகுப்புகள் அறவே நின்று போயிருந்ததால் பூமியின் கராத்தே மாணவர்கள் வேறு தேடி வரத் தொடங்கினார்கள். சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு அவன் சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. முத்தக்காள் உடல் நிலை தேறி எழுந்து நடமாடுகிற அளவு அபிவிருத்தி அடைந்திருந்தாள். அவளுக்கு வேண்டியவர்களெல்லாம், “காலம் ரொம்பவும் கெட்டுக் கிடக்கு, இனிமே நீ தனி ஆளா மெஸ்ஸை நடத்தறது முடியாத காரியம். அந்தப் பையன் பூமியையும் கூட இருக்கச் சொல்லு. விட்டுவிடாதே!” என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

முத்தக்காளுக்கும் அந்த யோசனை சரி என்றே பட்டது. ஹோட்டலோ; சினிமாக் கொட்டகையோ எதுவானாலும் அக்கம் பக்கத்திலே நாலு பேர் பரிந்து கொண்டு வருவதற்கு