உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சாயங்கால மேகங்கள்

உழைத்து வருந்தாதபடி மேனி மினுக்கியே வளர்ந்திருக்கும் அந்த உருவத்தை நிமிர்ந்து பார்த்தான் பூமி.

“நீங்கள் வீரப்பெருமாள் கோவில் தெரு சந்துலே இருக்கிறதாகச் சொன்னாங்க! முதல்லே அங்கே தேடிப்போனேன். அப்புறம் இங்கே பார்க்கச் சொன்னாங்க. இங்கே தேடிவந்தேன்.”

“அதெல்லாம் சரிதான்! என்னிடம் என்ன வேலையாக வந்தீர்கள்.

“எங்க அடுத்த படத்திலே கராத்தே, குங்பூ, ஜூடோ எல்லாத்தையும் கொண்டாரணும்னு ஆசை.”

“செய்யுங்களேன்.”

“அதாவது மெயின் சப்ஜெக்டே கராத்தே தான்! தீர்மானம் பண்ணியாச்சு.”

“கதையை முடிவு பண்ணி விட்டீர்களா?”

“சப்ஜெக்டை முடிவு பண்ணிட்டா அப்புறம் அதுக்குத் தகுந்த மாதிரிக் கதையை எழுதிக்கிடலாம்.”

“அப்படியா?”

“ஆமாம் ஹீரோ நிறைய அடி, உதை எல்லாம் குடுக்கிற கதையா ஒண்ணை எழுதிக்கணும்! ஆனால் சிக்கல் அதிலே தான் இருக்கு.”

“என்ன?”

பூமிக்கு வேலையின் அவசரமும் விரைவும் இருந்தாலும் அந்த வேடிக்கை மனிதரைக் கொஞ்சம் ஆழம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எதற்காக அந்த மனிதரை நிறுத்தி வைத்து வீணுக்கு உரையாடி நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று சித்ராவுக்குத் தோன்றியது. ஆனால் பூமி அவரோடு தொடர்ந்து வேடிக்கை பண்ணிக்கொண்டிருந்தான். அவரே தொடர்ந்தார்.