பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சாய்ந்த கோபுரம்



கடல் காற்று அதிகம். மெழுகுவத்திகள் எரிந்த பாடில்லை. அடிக்கடி அணைந்துவிடுகின்றன. கடலின் பேரிரைச்சல ஒரு பக்கம். கூடியிருக்கும் மக்களோ கொஞ்ச நஞ்சமல்ல, லட்சக் கணக்காக. அவரவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குப் போகப் பாதை தெரியவில்லை. ஒரே இருள்மயம். "விளக்கை ஏற்று, பித்தானை அழுத்து" என்று சொல்வதைக் கேட்டு அதன்படி செய்ய நியமிக்கப்பட்டிருந்தவன் அங்கேயில்லை. மின்சார விளக்குகள் சிட்னி கண்காட்சியில். பித்தான் பன்னிரெண்டாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள, லண்டனில் வீற்றிருக்கும் சிறந்த சிந்தனையாளன் மார்க்கோனி கையில். அழுத்திவிட்டான் பித்தானை மின்சாரம் பன்னிரெண்டாயிரம் மைல்கள் பயங்கரக் கடலைத் தாண்டி ஒரு வினாடியில் ஓடிவந்து சிட்னி கண்காட்சியில் அலங்கரிக்கப் பட்டிருந்த மின்சார விளக்குகளுக்கு ஒளியூட்டியது.

களிப்பு

வானமண்டலத்திலிருந்து சூரியனே கண்காட்சியில் குதித்துவிட்டானோ என்று நினைக்கும் அளவுக்குப் பரபரப்பு, தரையில் ஒரு ஊசி விழுந்தாலும் எடுத்துவிடலாம். பகலை விழுங்க வந்த, இருட்டைப் போருக்கழைக்க மார்தட்டி முன்னே வந்த வெளிச்சம்போல் எங்கும் ஒரே ஒளிமயம். அந்தச் சுடர்மிக்க சரவிளக்குகளைத் தாவிப் பிடிக்கப் போகின்றனர், இளைஞர்கள் மட்டிலுமல்ல, வயோதிகர்கள்,