பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சாய்ந்த கோபுரம்


காரணம். எப்படியும், இந்த மூவல்லரசை முச்சந்திக்கிழுக்க வேண்டும். வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. வினை ஒன்றுதான் தன் கண் முன் தோன்றுகின்றது. ஆனால், தகுதியான தலைவனில்லாத நேரம். இளைஞர்களை ஒன்றுபடுத்திச் சிதைந்த இத்தாலியை ஐக்கியப்படுத்தச் சிந்தனையாளர்கள் இல்லாத கொடுமை. அதன் வறுமையைத் தவிர்க்க தக்கதோர் வழிவகுத்துக் கொடுக்க வழிகாட்டிகள் தோன்றாத கொடுமை. மாஜினி தன் எண்ணத்தில் தோன்றிய எண்ணப்பாறைகளே கடலின் கற்பாறைகளாக மாறினால் மூவல்லரசுகளின் ஆணவ அதிகாரமென்ற தோணியைச் சுக்கு நூறாக்கலாமே என்றெண்ணுவான்.

இதுவா ?

சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற அருமையான வார்த்தைகளை நல்கிய சுதந்திரத்தந்தையும், ஜன நாயக கர்த்தாவுமான ரூஸோவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலில் சுதந்திரம் பெற்ற பிரான்சு நாடு தன் நாட்டைச் சீர்குலைப்பதை எண்ணி வருந்தினான். முதன் முதல் நோபெல் பரிசு பெற்ற ரோமன் ரோலாந்து, என்ற அறிஞனை ஈன்றெடுத்த பிரான்சு தன் நாட்டைப் பணியவைத்ததை எண்ணிப் பதைபதைத்தான். வீர நெப்போலியனைத் தங்கத் தொட்டிலிலாட்டிய பிரான்சு தன் நாட்டைப் பிணக்காடாக்குவதை எண்ணி மனம் உடைந்தான்.