பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

81


றிலே அவன் அழியாப்புகழை இடம்பெறச் செய்தார்கள் இதாலிய இளைஞர்கள். அவன் சொல்லில் சுயநலம் தொனிக்காது. செயலில் பேராசை தோன்றாது. சொற்களையடுக்கி ஆணித்தரமாகப் பேசுவான். கேட்டவுடனே செயலுக்குத் தூண்டும் சக்திவாய்ந்தவை அவனுடைய சொல்லம்புகள். ஒன்று திரளும் மனித ஆற்றலை மலைபோல் குவிக்கும் மாண்புமிக்க சொற்செல்வன். அவன் பேச்சில் மயங்கிச் செயலற்றுக் கிடக்கும் மக்களை உண்டாக்க வில்லை. எப்போது அவன் பேச்சு முடியும், முடிந்த பின் அவன் சொல்லியவண்ணம் செய்வோம் என்ற சுறு சுறுப்பைத் தாங்கும் மக்களை யுண்டாக்கினான்.

மாநாடு

இதே நேரத்தில் லண்டனில் ஒரு பெரிய மாநாடு. பொதுவுடமைத்தந்தை, காரல் மார்க்ஸ் தலைமைவகிக்கின்றார். நடைபெறப்போவது அகில உலகத் தொழிலாளர் மாநாடு. சொல்லவேண்டுமா ? முதலாளி வர்க்கம் மெளனம் சாதிக்குமா? எப்படியும் அந்த மாநாட்டை நடத்த வொட்டாமல் தடுக்க என்னென்ன முறைகளைக் கையாள முடியுமோ, அவ்வளவும் செய்து பார்த்துச் சலித்துத் தங்கள் முட்டாள்தனத்துக்கு மூடுவிழா செய்து விட்டு, “இந்தச் சண்டாளத் தொழிலாளர் மாநாட்டைப் பார்ப்பதே பெரிய பாவம்” என்று பல முதலாளிகள் வெளியூர்களுக்கு உல்லாசப் பிரயாணம் சென்றுவிட்டனர்.