பக்கம்:சாவின் முத்தம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்


சிந்திக்காதவன்—குறிக்கோள் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. இது அசைக்க முடியாத கருத்தாகும்.

இன்றைய தமிழ்நாட்டிலே, சிந்திக்காத—குறிக்கோளற்ற சொல் வளமற்ற—தமிழ் மரபு, இலக்கணம், இலக்கியம் இவற்றைச் சரிவரத் தெரிந்து கொள்ளாத பெரியார்கள் ‘கவிஞர்கள்’ என்று உலாவுவதை நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். இந்த வித உளைச் சேற்றிலே தாமரை எனத் தகும் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

இந்தக் கவிதைகளை இயற்றிய இளைஞர் ‘சுரதா’ கவியரசர் பாரதிதாசன் அவர்களின் வழித்தோன்றல்; கவிதைப் போக்கில் மட்டுமல்ல; கருத்திலும் கூடத்தான். நண்பர் ‘சுரதா,’' கவியரசர் அவர்களோடு நெருங்கிய தொடர்புள்ளவர். அந்தச் சாயலே இவர் தம் புலமைக்கு வேர் எனக் கருதுகிறேன்.

வளமான சொற்சுவை—குன்றாத அழகு—இயற்கைக்கு ஏற்ற ஆனால் புரட்சிகரமான கருத்துக்கள்—இன்பந் தரும் காதற்சித்திரங்கள்—புதிய புதிய உவமைகள்—இவை இந்தக் கவிதைத் தொகுதியில் நாம் காணுபவை.

எனக்கு ஒரு மகிழ்ச்சி: மறைவாக இருக்கும் தமிழ்ச் செல்வங்களைப் புத்தக உருவில் தருகின்ற நம் இனிய நண்பர் வி. ஆர். எம். அவர்களைப் பாராட்டவேண்டும்..

10-3-46
சென்னை
ப. முத்தையா
(முல்லை)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவின்_முத்தம்.pdf/5&oldid=1509832" இலிருந்து மீள்விக்கப்பட்டது