பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சாமந்தி-சம்பங்கி-ஓணான் இலை


தாளமாட்டாது வாடிக்கைக்காரர். ராமனை விட்டுவிட்டு, அவள் அருகே போய் நின்று, ஆண்டவனுக்காக பூ வாங்காமல், தன் சட்டைக்கு மேட்சாக ரோஜாப் பூவையும், உதட்டுக்கு மேட்சாக... அவள் கன்னத்தையும் மாறி மாறிப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார்!

தாயம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தபோது, சின்னான் ராமனைப் பார்த்தான். காந்தா, அந்த வாடிக்கையாளர் சட்டையில் ஒரு ரோஜா இதழை தன் கைபட மாட்டினாள். எல்லோரும் கண்களை சிமிட்டியபடி ஆகாயத்தைப் பார்த்தார்கள். பொதுவாக, ராமனிடம் பூ இல்லாவிட்டால், வேண்டிய பூக்களை அவள் ராமனிடமே கொடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கக் சொல்வாளேதவிர, அவள் ராமன் 'கிராக்கியை' கூப்பிடமாட்டாள். ராமனும் இப்படித்தான் ஒரு தடவை பூவோடு பூவாக விற்கட்டும் என்று வாழைப் பழங்களை வாங்கி வைத்திருந்தான். 'வண்டிக்கார' சின்னான், 'என்னோட சேல்ஸ் பூடும்பா' என்று சொன்னபோது, ராமன்தான் வாங்கிவந்த பழங்களைச் சின்னானிடமே கொடுத்து விட்டான்.

இப்படி எழுதப்படாத ஒரு தொழில் தர்மம் அங்கே நடந்து வரும்போது, இந்த காந்தா நடந்துகொள்ளும் விதம், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவள். அங்கே கடை போட்டிருந்த செருப்புக்கடை சீனன், அவளுக்காக இடம் விட்டு, பள்ளத்தைப் பார்த்துப் போனான். ஆனால், இந்த காந்தாவோ இப்போது எல்லோருக்கும் பள்ளம் வெட்டிக் கொண்டிருக்கிறாள். அவளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவள் சேர்ந்திருக்கும் இடம் அப்படி..

ஒரு மணிநேரம் ஓடிவிட்டது.

லைட் இல்லாத சைக்கிளில் காக்கி யூனிபாரம் போட்ட ஒருவர் லாவகமாக வந்தார். பிளாட்பாரச் சுவரில் ஒரு கையை , வைத்துக்கொண்டு, சைக்கிளை அங்குமிங்குமாக ஆட்டியபடியே கடைகண்களை நோட்டமிட்டார். ஆஜானுபாகுவான தோற்றம். சைக்கிளின் ஹாண்ட் பாரில் தொங்கிய லத்திக் கம்பு மாதிரி அமைந்த, அழுத்தம் திருத்தமான உடற்கட்டு. குதறுவதுபோல் இருந்த கண்கள்.