பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

89


தொட்டு குறுக்குச் சுவரை எழுப்பி விட்டார். இதற்குள், அமைச்சர் வருவதே வருகிறார், வேறு சில பள்ளிக் கட்டிடங்களையும் திறந்து வைக்கவேண்டும் என்று இதர ஊராட்சித் தலைவர்கள் சொன்னதை ஆணையாளர் உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒப்பிலியப்பனுக்கு மட்டும் பேர் போகலாமா?

விழா நாள் பிறந்தது.

ஒப்பிலியப்பனின் வெத்துமாஞ்சாவடியில் குடிநீர் குழாய்க்கருகே, எவர்சில்வர் குடங்களுடன் ஏகப்பட்ட மேக்கப்புடன் உள்ளுர் தலைவர்களின் மனைவிகளும் மகள்களும் காத்திருந்தார்கள். மேடையில், அந்தப் பகல் நேரத்திலும், இரவில் எரியாத மின்சார விளக்குகளும் எரிந்தன.

அமைச்சர் இன்னொரு ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைப்பதற்காக வாணவேடிக்கைகள் சூழ மேடைக்குப் போனார். ஆட்சித் தலைவர், அவர் இவர் என்று கூட்டத்தில் பாதிப்பேர் மேடையில் இருந்தார்கள். மேடைக்கு முண்டியடித்துப் போன பப்ளிசிட்டி ஆபீசரை ஆணையாளர் வழி மடக்கினார். அவரது காதை வாயருகே கொண்டு வரச்செய்து, ஏதோ கிசுகிசுத்தார். பப்ளிசிட்டியார் குதித்துத் துள்ளினார் :

"அய்யய்யோ...! நம்மால முடியாது ஸார்..."

"பப்ளிசிட்டி லார்! நான் ஒங்களத்தான் மலை போல நம்பியிருக்கேன்... பிளிஸ் எனக்காக... எனக்காக...!"

"நான். எப்படி ஸார் அப்படி? கெளரவமுன்னு ஒண்னு இருக்கே"

"அப்படிச் சொல்லப்படாது... ஒங்கள மாதிரி ஆட்களுக்கு கெளரவம் தேவையில்ல. நான் ஒங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். நீங்க அனுப்புற நாடக கோஷ்டிகளுக்கு இடம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். திரைப்படம் காட்டுறதுக்கு... கிராம சேவக்கை அனுப்பியிருக்கேன். இப்படி உதவி செய்த எனக்கு உதவி செய்ய ஒங்க வாழ்நாள்லயே முதல் சந்தர்ப்பம் வந்திருக்கு பிளீஸ்... பிளீஸ்...!"