பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

91


பகுதியில் தனக்கு அடையாளம் தெரிந்த ஒரு சிலரையும் பெயரிட்டு (அடைமொழியுடன்!) விழித்தார். பொதுமக்கள் பகுதியில் மெஜாரிட்டியினராய் இருந்த பையன்களை நேரிடையாக அழைத்தார்.

"டேய்! பசங்களா. இவரு யாரு தெரியுமாடா..? தெரியாதா. இவருதான் கலெக்டர். ஆனால் இவரைப் பார்த்தா கலெக்டர் மாதிரி தெரியுதா? இவர யாராவது கலெக்டர்னு சொன்னா நம்புவாங்களா? நம் ஆட்சித் தலைவர் அவர்கள் அவ்வளவு எளிமையானவர்... அவ்வளவு அடக்கமானவர், இவரு மாதிரியே நீங்களும் படித்து முன்னுக்கு வரணும். இவரைப்போல புன்னகை தவழ... கம்பீரமாக அதேசமயம் எளிமையாக, நேர்மையாக. இனிமையாக இருக்கணும்."

எப்படியோ பதினைந்து நிமிடம் ஆகியது. கலெக்டர், இப்போது 'கண்டுக்க'வில்லை. ஆனால் அமைச்சரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் புருவத்தை உயர்த்தியபோது பேச்சாளர் திரிசங்கு சுருதியை மாற்றினார்.

"அடக்கத்தில் சிறந்தவர் அமைச்சரா அல்லது ஆட்சித் தலைவரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு எளிமையையே ஒரு இயல்பாகக் கொண்டவர் நம் அமைச்சர். தமிழ்கூறும் நல்லுலகின் தளநாயகர். எடுத்ததை முடிப்பவர் முடித்ததை எடுப்பவர். எதிரிக்கு அஞ்சாதவர்... ஏனெனில் எதிரியே இல்லாதவர். இவர் நமக்கு அமைச்சராகக் கிடைத்ததற்கு நாம் அருந்தவம்..."

ஆட்சித் தலைவர் கோபத்தோடு அவரைப் பார்த்தார். ஆனால் பப்ளிசிடி திரிசங்கு விடவில்லை. ஆட்சித் தலைவரையும். அமைச்சரையும் மாறி மாறிப் புகழ்ந்தார். இடையிடையே, ஐந்தாண்டு திட்டங்களுக்குள்ளும் போனார், போனார், போய்க் கொண்டே இருந்தார்.

எப்படியோ அரை மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது லேசாக இருமிய திரிசங்குவை, அமைச்சர் கனிவுடன் பார்த்துக் கொண்டே "முதலில் உடல் நலத்தைப் பாருங்க. பேசிப் பேசியே உடம்பையும் கெடுத்துக்கிட்டிங்க. வெத்துமாஞ்சாவடில நீங்க பேசக் கூடாது. இது என்னோட அன்புக் கட்டளை. அங்கேயும் பேசி உடல் நலத்தைக்