பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

95


கேட்கமாட்டேங்குதே. என்னையும் புலம்ப வைக்குதே. நான் பெத்த மக்கா! அம்பது வருசமா, ஒங்கள முதல்ல இடுப்புலயும் அப்புறம் மனசுலேயும் தூக்கிச் சுமக்கிற என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட கொண்டு போக வேண்டாம். இந்த பாவி மூளை, நான் பாத்தறியாத வெள்ளக் கட்டி வேல வெட்டிய நிறுத்தற வரைக்கும், ஒரு அரை நாழிகை பொறுக்கப்படாதா... ஒப்பாரியோட ஒப்பாரியா பிணத்த தூக்கிக் குளிப்பாட்டுங்கன்னு கூசாம சொல்லுறியளே. பயமா இருக்கே. சாவுக்கு பயப்படல மக்கா... என்னை உயிரோட எரிச்சிடுவி களோ என்கிற பயந்தான். கொஞ்ச பொறுங்க மக்கா... நான் போயிடுவேன்... உலகத்துலே இருக்கிறவங்க போனாத்தான் இல்லாதவங்க இருக்க முடியுமுன்னு எனக்கும் தெரியும் மக்கா'.

கனகம்மா பாட்டி, தனக்குள்ளே அப்படிப் பேசிப் பாரத்தளே தவிர அவளை, ஏதோ ஒன்று கவ்வியது. பயத்தின் பயங்கர உணர்வான பீதியா... திகிலா... வெறுமையா... பிரம்மையா... அல்லது இவை அனைத்தும் ஒன்றான பெரும்பேர் உணர்வா... ஒரு பிசாசின் புலம்பலா... அவளுக்கே இப்போது புரியவில்லை. ஆனாலும் நெற்றிக் கூட்டின் பின் பக்கம் வெண்பனி போல் அப்பிக் கிடந்த அவள் முன் மூளையில் பழைய பதிவுகள் இப்போது துடித்தன. அம்பது அம்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முகமறியாத மனிதனுக்கு கழுத்தை நீட்டி, இடமறியாத ஊருக்குப் பெற்றோரைப் பிரிந்து, வில் வண்டியில் ஏறும் போது, எப்படி பேதலித்தாளோ, அப்படிப் பட்ட பேதலிப்பு. கூடவே, ஏற்பட்டதே ஒரு இனிய எதிர்பார்ப்பு... அதேபோன்ற எதிர்ப்பார்ப்பு இப்போதும் அவளது உணர்வுகளில் ஊடாடியது. அது வாழ்க்கை துவக்கிய வாழ்வு வண்டி. இதுவோ அதை முடித்துவிட்டு அழைத்து செல்லும் மரண வண்டி. இது எப்படி இருக்குமோ... யாரெல்லாம் இருப்பார்களோ... தனியா போகணுமோ... தவியா தவிக்கணுமோ... பூலோகத்த பிரிஞ்ச வெறுமையில் குதியா குதிக்கணுமோ... அம்மாவ பார்க்கலாமா... செத்து மடிஞ்சி சிவலோகம் போன மகள பாக்கலாமா... அவளோட மவராசன் கிடைப்பாரா... இல்லேன்னா கடவுள்கிட்டத் தான் போவோமா... அவர் எப்படி இருப்பார்... முருகனா... அம்மனா... அல்லாவா... ஏசுவா... இல்ல சூன்யமா... சொர்க்கமா... அய்யயோ நரகமா... பாக்கலாம்... கொஞ்ச நேரத்துல முடிச்சு அவிழும்.