பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



X

போலித்தனம் கிடையாது. பரிசுக்கும் பாராட்டுக்கும் எழுதும் பித்தலாட்டமும் கிடையாது. சமூகத்தின் குரூர அவலங்களை, நெருப்புப்பொறி சிதறுதல் போல் வெடிப்போடு சித்தரிப்பார். சில நேரங்களில், தன் இலக்கியக் கோட்பாடுகளின் எதிரிகளோடு வரிந்து கட்டிக்கொண்டு, தன் எழுத்தாயுதத்தால் சாடி, துவம்சம் செய்வார். அர்ச்சுனனின் வில்விசையில் அடங்கியிருக்கும் குறிக்கோள் முனை போல், இவரின் நோக்கும், நட்பு முறை பாராட்டப்படுவதில்லை. இந்த இடத்தில் எனக்கு உலகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் மினகல் ஷோலகாங். கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

“நமது இலக்கியத்தொழிலில், நமது சிந்தாந்தப் பணியில், கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் இருந்து வழுவிச் செல்லும் செயலாக இருந்தால், உங்களது உயிருக்குயிரான நண்பருக்குங்கூட, அந்தச் செயலுக்காக மன்னிப்பு அளித்துவிடக்கூடாது.”

இது, நம் தோழர் சமுத்திரம் அவர்களுக்கு முற்றும் பொருந்தும். அவரின், இந்த நக்கீரக் குணாம்சம்தான் சமூகப் போராளிகளான எங்களைப் போன்றவர்களின் அன்புக்கும், பாசத்துக்கும், கனிவுக்கும் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது.

யதார்த்தவாதப் பாரம்பரியம்

சிறுகதைத் துறை என்பது, புதுமைப்பித்தன் காலத்திலிருந்து, இன்று வரை வடிவத்திலும், உள்ளடக்கத்திலும், எவ்வளவோ மாறிவந்திருக்கிறது. யதார்த்த வாதத்தைச் சிறுகதையில் துவக்கி வைத்த புதுமைப்பித்தன் வழியில் நின்று, விந்தன், சுரண்டும் வர்க்கத்தின் மீது கண்டனக்குரலோடு, சிறுகதைப் போக்கை சற்று நகர்த்தினார். அது, மேலும் பழம்பெரும் படைப்பாளிகளான தொ.மு.சி. ரகுநாதனாலும்,