பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

99


கோயில் மாதிரி கட்டணுமாம். அடுத்த வருசம் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்க வரும்போது, அம்மா சமாதியில பூசை நடத்துவனாம்.. அடேய் கார்த்தி.. அமெரிக்க சித்தாப்பாவுக்கு, பாட்டி இறந்த செய்தியச் சொல்லி கல்லறை கோயில் கட்ட குறைஞ்சது மூவாயிரம் டாலர் ஆகுமுன்னு டெலிபோன் போடு'...

கனகம்மா. தனது மூளையை, ஆட்டு மூளையைப் போல் அரிவாள் மணையில் மானசீகமாக அறுத்தாள். பாட்டி புலம்பினாளோ.. இல்லை மூளை புலம்பியதோ...

'நான் பெத்த மக்கா. குடிசையாய் இருந்த இந்த வீட்டை கோபுரமா ஆக்கின எனக்கு கல்லறை தேவை தாண்டா... உங்கள பெத்த வயித்த. அது எங்கே இருக்கோ. தேடிப் பிடிச்சி ரெண்டாக் கீறி அதுல கல்லறை கட்டுங்கடா... அவசர ஆபத்துக்கு சொந்தப் பந்தத்தை வரவழைக்கத்தான், டெலிபோன் இருக்கிறதா நெனச்சேன்... இப்பத்தான் புரியது மக்கா. தாய் பிள்ள உறவும் டெலிபோன் சிநேகிதமுன்னு'.

திடீரென்று ஒரு கூக்குரல். அது முடியும் முன்பே, ராமய்யாவின் அதட்டல். அவர் மனைவியின் பிளிறல்.

'பாட்டிம்மா... நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் பாட்டிம்மா?

'மாட்டுக்கு வைக்கோல் போடாம. இங்க வந்து பிலாக்கணமா பாடுற? மூதேவி... வேணுமுன்னா உன் பாட்டிகூட போறியா?'

'தாயில்லாப் பொண்ணுப்பா... இப்படியா தலையில குட்டுறது?'

'ஓங்களுக்கு என்ன தெரியும் மாமா? இந்தக் கேணச்சி எப்போ இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சாளோ.. அப்பவே இவுக நாய் படாத பாடுதான்.'

சலனத்தைக குறைத்துக் குறைத்து, சன்னஞ் சன்னமாய், அடக்கமாகிக் கொண்டிருந்த கனகம்மாவின் மூளையில் பழைய நிகழ்வுகளின் பதிவுகள் முட்டின; மோதின... மனிதக் காட்சிகளாய் படமெடுத்தன.

பாட்டியின் தலைமகள் - முதலிரவு போல் மறக்க முடியாத முதல்மகள் சொர்ணத்தை, வெளியூரில் ஒரு ரெவின்யூ