பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

101


முதல் தடவையாக, தாய் மாமனின் கட்டளையை மீறி, மாட்டுத் தொழுவத்திற்குப் போகாமல், நின்ற இடத்திலேயே நின்றபடி பீறிட்ட ஆடலரசியின் புலம்பல், பாட்டியின் மூளையில் ஒரு புதிய பதிவை ஏற்படுத்தியது. கூடவே வெளியே இழவுச் சங்கின் ஓங்காரம். உள்ளே ஒப்பாரியின் உச்சம். இந்த இரண்டும் ஒன்றை ஒன்று கூட்டிக் கொண்டும், குறைத்துக் கொண்டும், இருந்த போது, 'சீக்கிரமா குளிப்பாட்டுங்க' என்ற ஆணைகள்... மீண்டும் ஆடலரசியின் ஒலம். 'பாட்டிம்மா என்னை கூட்டிப் போ பாட்டிம்மா.. இல்லாட்டா திரும்ப வந்துடு பாட்டிம்மா’...

கனகம்மா பாட்டியின் மூளை உக்கிரமானது, உஷ்ணமானது. பின்னர் ஒளியானது. வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியம், அவள் உடல் முழுக்க எண்ண அலைகளை எழுப்பின. வாழ்வனுக்கள் ஒன்றாய் திரண்டு, உயிர்த்திரளானது. ஈஸ்வரன், எமனை உதைப்பது போன்ற ஒரு காட்சி, அவள் உச்சிமுனை கபாலத்தில் தோன்றியது. உடனே தலைசிம்மாசினத்தில் உள்ள முன், பின், பக்கவாட்டு மூளைப்பகுதிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து, தங்கள் அதிகாரத்தை, உடல்தேசத்தின் மீது நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது -

கனகம்மா பாட்டியின் கண்கள். இமைச்சிறையில் இருந்து விடுதலை பெற்று சுழன்றன. வலது கால் சிறிது மேல் நோக்கி எம்பியது. இடது கால் பாட்டியை எழுப்பும் முயற்சியாக கட்டில் சத்தத்தில் அழுந்தப் பதிந்தது. இரண்டு கைகளும் பக்கவாட்டுச் சட்டங்களை கல்விக்கொண்டன.


ஆனந்த விகடன் - அக்டோபர், 1999