பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

105


கொண்டிருக்கிறார். இத்தனை நெருக்கடியிலும் உங்களைக் காண விரும்புகிறார். கையோடு கூட்டி வரச்சொன்னார்... போகலாமா?..."

அக்னிநாத் வழக்கம்போல், 'இயக்குநர் பிரமிப்பு' ஏகனை. வளைத்துப் பார்த்தான். அவன் பார்வைகளை அர்த்தப் படுத்துவதற்காகவே பிறவி எடுத்ததுபோல், அவன் முகத்தையேப் பார்த்த இயக்குநர் பிரமிப்பு, ஆட்சித் தலைவருக்கு விட்டான் ஒரு விடு.....

"எங்க அண்ணன்தான், உங்க அமைச்சருக்குத் தேவை. உங்க அமைச்சர் எங்க அண்ணனுக்குத் தேவையில்லை... இன்னும் ஐந்து நிமிடம் டைம் கொடுக்கேன்... வேணுமின்னா ஓங்க அமைச்சர இங்க வந்து, அண்ணனப் பார்க்கச் சொல்லுங்க... என்னய்யா இது... நாட்டுல தராதரமே இல்லாமப் போயிட்டு..."

அக்னிநாத், ஆமோதிப்பாய், தலையாட்டியபோது, புலியாய் வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இப்போது சூடுபட்ட பூனையாய், திரும்பிப் பாராமலே நடந்தார். அவரது பரிவார மனிதர்களும் ஆட்சித் தலைவர் திரும்பிப் பார்க்காததால், நேராகப் பார்த்தபடியே நடந்தார்கள்.

அக்னிநாத், அமைச்சரின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்தான். அந்தச் சமயம் பார்த்து ரயில் நிலையத்தில் ஒரு பூவரசு மரத்துக்கு அடியில், அக்னிநாத்தை எதிர்பார்த்து கும்பலாய் கூடி நின்ற கல்லூரி மாணவிகள், அவன் நின்றதைப் பார்த்ததும், தலைவிரி கோலமாக ஓடிவந்து கூட்டத்துள் கலந்தார்கள். மொட்டை மரமாய்த் தோன்றிய ஆடவர் கூட்டத்தில், பெண் பூக்களாய்ப் மலர்ந்தார்கள். தேர்வு நேரந்தான். அது வரும்... போகும். ஆனால், காதல் சிங்காரன் அக்னிநாத் அப்படி அல்லவே... எப்போதோ வருகிறவன். விட முடியுமா....? "சார் சார்... அக்னிசார்.... ஆட்டோகிராப் போடுங்கசார்... ப்ளீஸ் அக்னி.... போட்டுத்தான் போகணும் அக்னி... இல்லாட்டா நடிகை கம்பா, உங்கள 'காதலோ காதல்' படத்தில வழிமறிப்பு செய்ததுபோல வழிமறிப்புமாக்கும்..."

எதிர்கால அமைச்சருக்குரிய அத்தனைத் தகுதிகளையும் கொண்ட ஒருத்தி, உரக்கச் சொன்னதும் ஒரே சிரிப்பு.... ஒரே முட்டல்மோதல்...