பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வெள்ளித் திரையும், வீதித் திரையும்


ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு நோட்டுப் புத்தகம், தலைக்கு மேல் போய் பறவையாய் சிறகடித்தது.... விசிறியாய் விரிந்தது... அக்னிநாத்தும் சிரித்தபடியே கையெழுத்துப் போடப் போனான்... அந்தச் சமயத்தில் - கெடுமுடிவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே ஒரு தடித்த மனிதர், தனது கைத்தடி மனிதர்களோடு ஓடிவந்தார். கரைவேட்டி.... கரைத்துண்டு... ஆங்காங்கே கரைகளும் கொண்ட முகம்.... கூட வர மறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரை, சென்னையில் அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒரு துருப் பிடித்த நாற்காலியில் துணைச் செயலாளராக அமர்த்திவிடுவது என்ற ஆவேசத்தோடு நெருப்பாய் வந்தவர், நீராய்ச் கொட்டினார்... அக்னிநாத்தை ஆரத் தழுவியபடியே ஆனந்தக் கூச்சலிட்டார்.

'என் பெயர் அற்புதன்.... அமைச்சராய் இருக்கேன்... ஒங்க எல்லாப் படங்களுமே எனக்கு அத்துபடி. என் மனைவிக்கும் ஒங்கள ரொம்பப் பிடிக்கும்... இந்தாப்பா கேமரா... எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் எடு... பி.ஆர்.ஓ! நானும் தானைத்தளபதி அக்னிநாத்தும் இருக்கிற படங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பிடு. ஒங்களப் பார்த்ததே என் கண்கள் செய்த பாக்கியம்!

அமைச்சரின் பேட்டிக்காக வந்திருந்த அத்தனை செய்தியாளர்களும், தொலைக்காட்சி நிபுணர்களும், நிபுணிகளும், அமைச்சரை விட்டுவிட்டு, அக்னிநாத்தை மொய்த்தார்கள். அவனோ, தன் காலடியில் கண்களைக் குவித்த அமைச்சர் அற்புதனை கட்டியணைத்து, பிற்கு நெஞ்சுக்கு நேராய் நிமிர்த்தி, ஒரு கையை மட்டும் தூக்கி ஆட்டிக்காட்டி அவரை ஆசீர்வதித்தான். அதுவரைக்கும் காத்திருந்த செய்தியாளர்கள் அடுக்கடுக்காகக் கேட்டார்கள்...

'அக்னிநாத்!... ஒங்க மாநில அக்னிநாத் நற்பணி மன்ற மகாநாட்டில், மன்றத்தை ஒரு அரசியல் கட்சியாய் அறிவிக்கப் போறீங்களாம்... இது உண்மையா?'

அக்னிநாத், அமைச்சரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு செய்தியாளர்களை நெருங்கி சிரித்தபடியே பதிலளித்தான்.