பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

107



'மாநாடு மாலையில் துவங்குகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...

'அப்புறம் மிஸ்டர் அக்னி...! இந்தச் சாதிக்கலவரங்களப் பற்றி என்ன நினைக்கிறீங்க?...

'சாதி என்றவுடன், எனக்கு நினைவுக்கு வரும் வார்த்தை 'பெண்சாதி'தான். அந்த நினைப்போடதான் என் தாய்மாமா வீட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்.'

'மண் வாசனைய தூளாக்கிட்டிங்க அக்னி... இப்பவும் கிராமங்களுல மனைவிய 'பெண்சாதி'ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆமா அங்க என்ன விசேஷம்?'

'என் மாமா மகள் கயல்விழியை கட்டிக்கப் போறேன்...'

செய்தியாளர் கூட்டம் முண்டியடித்தது. பொக்காரான் அணுகுண்டு வெடிப்பு அறிவிப்பு பேட்டியில்கூட, அப்படி முண்டியடித்திருக்க மாட்டார்கள்... கேமராக்கள் பளிச்சிட்டன... தொலைக்காட்சி வீடியோக்கள் ஒளியிட்டன... மிக முக்கியமான நிகழ்ச்சி.... அதுவும் தலைப்புச் செய்தி... ஏனோதானோன்னு இருக்க முடியாது...

'வாழ்த்துக்கள் அக்னிசார்! இது காதல் திருமணமா?'

'நோ... நோ... எங்க மாமா பொண்ண, பத்து வயசுச் சிறுமியா பார்த்தது... அதுக்குப் பிறகு பத்து வருடமா பார்க்கவே இல்ல... என்னோட கிராமத்து வேர்கள் விட்டுடப்படாதுன்னும் என்னை சின்ன வயதில் ஆதரித்த தாய்மாமாவுக்கு நன்றிக்கடனாயும் கயல்விழியக் கட்டிக்கப்போறேன்.'

'தப்பா நினைக்கப்படாது. ஒங்களுக்கும் நடிகை கம்பாவுக்கும் நெருக்கமுன்னும், நீங்க அவங்கள கட்டிக்கப் போறதாயும் ஒரு கிசுகிசு அடிபட்டதே...'

'அந்தக் கிசுகிசுவக் கிளப்பிவிட்டதே பிரஸ்தான் நானும், கம்பாவும் நல்ல நண்பர்கள்... ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையைக்கூட அது இல்லாமலே பகிர முடியும்.'