பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வெள்ளித் திரையும், வீதித் திரையும்


'கொன்னுப்பிட்டிங்க அக்னி... பெண்ணியத்தை இந்த அளவுக்கு யாரும் பெருமைப்படுத்தி பேசல...'

'சார்... நாங்க அமாவாசை தொலைக்காட்சியோட டீம்... ஒங்க மேடத்த... அதான் கயல்விழிய நேர்காணல் செய்யணும்... நீங்கதான் ஏற்பாடு செய்யனும் சார்...'

'அதுக்கென்ன... வாங்கிக் கொடுக்கிறேன்... கரும்பு தின்ன கூலி கேட்பாளா என்ன...'

அக்னிநாத், சிரித்தபடியே நடந்தான். முண்டியடித்த செய்தியாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக நடை மன்னன் ஆனான். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகனும், மன்ற நிர்வாகிகளும் நாலுகால் பாய்ச்சலில் ஓட வேண்டியதாயிற்று. விரட்டிவந்த கூட்டத்தை கையமர்த்தியபடியே, அக்னிநாத், தயாராக நிறுத்திவைக்கப்பட்ட ஒரு சொகுசுக் காரின் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, இயக்குநர் பிரமிப்பு முன்னிருக்கையில் ஏறிக்கொண்டான். மன்றத் தலைவர்கள் குறிப்பாக் அக்னிதாசன் எம்.ஏ. பி.எல், தனது தலையை மட்டும் சட்டென்று எடுக்காதிருந்தால், கார் கதவுக்குள் அது நசுங்கியிருக்கும்.

கருஞ் சிவப்பு வண்ணத்திலான அந்த சொகுசு கார், குட்டாம்பட்டிக்கு இட்டுச் செல்லும் கப்பிச் சாலையில் ஒடிக் கொண்டிருந்தது. இயக்குநர் பிரமிப்பு கேட்டான்.

'நீங்க மூட்அவுட் ஆனது மாதிரி தெரிஞ்சுதுண்ணே!'

பின்னே என்னடா... என்னை எதிர்கால முதலமைச்சரேன்னு போஸ்டர்ல போடாமல், ஆளுநரேன்னு போட்டா என்னடா அர்த்தம்? மன்றத் தலைவன மாற்றணுன்டா... வாங்குற காசுக்கு மோசம் பண்ணிட்டாண்டா... எச்சிக்கலப் பய....'