பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

நான்காவது குற்றச்சாட்டு



'கண் கலங்காதீங்க... விசாரணை அதிகாரி, உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லன்னு தெளிவாகவே எழுதி இருக்கார். அதனால உங்க சஸ்பென்சன ரத்து செய்வதற்கான குறிப்பையும் கொண்டு போறேன். செயலாளர் சும்மா ஒப்புக்கு ஒரு கையெழுத்துப் போடணும்... போட்டாகணும். மீதியை நான் பார்த்துக் கொள்வேன். அதோ அங்கே இருக்கிற பார்வையாளர் அறையில் உட்காருங்க கால் மணிநேரத்துல திரும்பி வந்து, அரைமணி நேரத்துல, என் கையாலேயே உங்களுக்கு மறுநியமன ஆர்டரை கொடுத்துடுறேன்.'

மாணிக்கம், உயிர்த்தெழுந்தார். அவளை கையெடுத்துக் கும்பிட்டார். கோவிலில் அம்பாளைக் கூட அப்படி கும்பிட்டி இருக்கமாட்டார். அந்த அடுக்கு மாடி அரசு கட்டிடத்தின் இந்த ஐந்தாவது நீண்ட நெடிய விதானம், அவருக்கு ஆலயப் பிரகாரமாகவும், அவள் கற்சிலையிலிருந்து பர்வினாய் வெளிப்பட்ட துர்க்காகவும் தோன்றியது. ஆறுமாத காலமாக, சஸ்பென்சன், முறையீடு, நடுவர் மன்றம், விசாரணை என்று அலையாய் அலைந்த வனவாசம், முடிகிறது. நிம்மதியாக இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுப் பெற்று. அவரது சஸ்பென்சன் போல் இடைக்காலமாய் தடைபட்ட மகளின் திருமணத்தை நடத்திவிடலாம். அப்படியும் இந்த சஸ்பென்சன் விவகாரம் திருமணக் கூட்டத்தில் அடிபடத்தான் செய்யும். அவர் மீது அனுதாபப் பார்வைகள் பாயும். இந்த லட்சணத்தில் இடைக்கால பதவி நீக்கம், தண்டணை ஆகாது என்று சட்ட விதிகள் கூறுகின்றன.

சுகுமார் இ.ஆ.ப. - செயலாளர் என்ற பொன் முகாமில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை பார்த்தபடியே தள்ளுகதவைத் தள்ளிய பர்வின், பின்னோக்கி நடந்து, மாணிக்கத்திடம் கிசுகிசுப்பாய் பேசினாள்.

'அப்புறம்..... நான் உங்களுக்கு வேண்டியவள் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிந்தால், முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளருக்கும் மொட்ட மனு போய்விடும். மொட்டைமனு எழுதுறதுல, பியூனுக்கும். ஐ.எ.எஸ் அதிகாரிக்கும் வித்தியாசம்