பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நான்காவது குற்றச்சாட்டு


வைத்திருப்பார். வந்திருப்பவளோ சொந்த சாதி.... அதாவது நேரடி ஐ.ஏ.எஸ். சாதி. கோப்பை நீட்டிய பர்வினிடம் 'நீங்களே படித்துச் சொல்லுங்க' என்றார். - ஒரு பார்வையில் தொலைக்காட்சிப் பெட்டியையும் மறுபார்வையில் அவளையும் தாங்கிக் கொண்டு.

பர்வின், கோப்பைப் படிக்காமல், அதன் விவரங்களை, சுருக்கமாக எடுத்துரைத்தாள்.

'முதலாவது குற்றச்சாட்டு சார்... மாணிக்கம் என்கிற அரசு அதிகாரி அலுவலக ஜீப்பை நூறு கிலோமீட்டர் வரை தவறாக சொந்தக் காரியத்திற்குப் பயன்படுத்தினார் என்பது. நிசமாவே, அவர் காரியத்திற்குத்தான் பயன்படுத்தி இருக்கார். அதாவது, ஒரு குக்கிராமத்தில் அவர் மேற்பார்வைப் பணிக்குப் போனபோது, தந்தை இறந்துவிட்டதாக நள்ளிரவில் செய்திவந்தது. பேருந்து வசதி இல்லாத அந்த நேரத்தில், ஜீப்பை எடுத்துக் கொண்டு போயிருக்கார். இப்படி அவசரத்திற்கு அரசு வாகனத்தை எடுத்துக் கொள்ளலாமுன்னு. இதோ இந்த விதி கூறுகிறது. அந்த ஜீப்பை எடுத்த மறுநாளே, மாணிக்கம், நிலைமையை விளக்கி அதற்கான இப்சோ பேக்ட்டோ அனுமதி கேட்டு, விண்ணப்பித்து இருக்கார். கூடவே ஜீப்பை எடுத்ததற்கான பணத்தையும் அனுப்பி இருக்கார். இதற்கான கடித நகலும் மணியார்டர் ரசீதும் உள்ளன. அதோடு மறுநாள் விடுமுறை என்பதால் அரசுப்பணியும் பாதிக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி இந்தக் குற்றச்சாட்டில் இருந்து இவரை விடுவித்து இருக்கிறார்'.

'சரி, ஏற்றுக்கொள்கிறேன். அப்புறம்... அடுத்தது....'

பர்வின், மாணிக்கம் தன்னை எப்படிப் பார்த்தாரோ அப்படி சுகுமாரைப் பார்த்தாள். அந்த சுகுமாரோ, அரசாங்க குளிர்சாதனக் காரில் தன் மகள்களை கல்லூரிக்கு அனுப்புவதை நினைத்து லேசாய் நிலைகுலைந்தார். பர்வின் தொடர்ந்தாள்.

'இரண்டாவது குற்றச்சாட்டு சார், ஆதிதிராவிட ஊழியர் ஒருவரை, இந்த மாணிக்கம், சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார் என்பது. ஒருநாள், அந்த ஊழியரைப் பார்த்து 'உன் புத்தியைக் காட்டுறியே... உட்கார்' என்று சிரித்தபடியே மாணிக்கம் கேட்டிருக்கிறார். அதாவது,