பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

121


அலுவலகத்துக்கு வழக்கம்போல் தாமதமாக வரும் புத்தியை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஊழியர் புறக்கணிப்பதற்காக, அப்படிக் கடிந்திருக்கிறார். இதை, அந்த ஊழியர். தன் சாதிப் புத்தியை காட்டுவதாக மாணிக்கம் குறிப்பிட்டதாய், தர்க்கமாகவோ, குதர்க்கமாகவோ எடுத்துக்கொண்டு, புகார்செய்துவிட்டார். மாணிக்கம், தான் அப்படிப்பட்டவர் இல்லையென்றும், இடஒதுக்கீடுகளை ஒழுங்காக அமுல்படுத்துகிறவர் என்றும், பல்வேறு ஆதிதிராவிட ஊழியர் கூட்டங்களில் சேரிக்குடிசையும், சாதிக்குடிசையும் ஒன்றாக வேண்டுமென்று பேசியிருப்பதையும், சாட்சியங்களாக வைத்தார். அந்த அலுவலக ஆதிதிராவிட நல ஊழியர் சங்கமும், மாணிக்கம் ஆதிதிராவிட விரோதியல்ல, நண்பரே என்று எழுதிக் கொடுத்திருக்காங்க'.

'அவங்க பயந்துகூட எழுதி கொடுக்கலாம்.'

'அப்படியும் சொல்ல முடியாது சார்... இடைக் கால பதவி நீக்கத்தில் இருக்கிற ஒரு அதிகாரியை, அவர் கெட்டவராக இருந்தால் ஒழித்துக் கட்டுறதுக்கு இதுதானே சந்தர்ப்பம்? விசாரணை அறிக்கை மாணிக்கத்தை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது.'

'நானும் விடுவிக்கிறேன். அப்புறம் அடுத்தது'.

'மூன்றாவது குற்றச்சாட்டு, ஒரு பாடகியிடம், மாணிக்கம், முறைதவறி நடக்கப் போனார் என்பது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாணிக்கம் மாவட்ட துணைஅதிகாரியாய் இருக்கும் போது, மாநில குடும்ப நலத்துறை, ஒரு இசைக் குழுவை இவர்களது துறைக்கு அனுப்பி வைத்திருக்கு. இந்த மாணிக்கம், கலை நிகழ்ச்சியை பார்வையிட சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு போயிருக்கார். ஆனால், அவர் போய்ச் சேர்வதற்கு முன்பே, அந்த இசைக்குழு ஒரு கல்யாண வீட்டில் இசைத்துவிட்டு, அதற்காகப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விட்டது. மறுநாள், இவர், அந்தக் கலைக்குழு தலைவரிடம் இதுபற்றிக் கேட்டிருக்கார். மேலதிகாரிகளுக்கு எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார். உடனே கலைக்குழுத் தலைவர், பயந்து போய், இவரது மாவட்ட அதிகாரியை அணுகியிருக்கிறார். ஏற்கனவே இந்த