பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள்... அவளாக....


அறைக்குள்ளே அகமும் புறமுமாய் இயங்கிய வர்த்தினி, அந்த அறையின் எல்லைக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, ஒரு கையில் சின்ன சூட்கேஸோடு வராந்தாவிற்கு வந்தாள். சுவருக்கு மதில் போல, சுவரோவிய வண்ணக் காகித நிறத்தில் தோற்றம் காட்டிய சோபா செட்டில் உட்காராமல், ஒரு மூலையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, விரித்துப் பிடித்த செய்திப் பத்திரிகை ஒன்றிற்குபடி "தலைமறைவான"வனைப் பார்த்து வர்த்தினி சிறிது பரபரப்போடு பேசினாள்.

"ராமசாமி. நேரமாயிட்டு"

அரசியல் சட்டம் 356 - சம்பந்தப்பட்ட செய்தி நிகழ்வுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இ.பி.கோ சம்பந்தப்பட்டதும், சுவை படுத்தப்பட்டதுமான சம்பவங்களை படுசுவையாக படித்துக் கொண்டிருந்த டிரைவர் ராமசாமியின் காதுகளில், ஒரு நடிகைக்கும், அவளது காதலனுக்கும் இடையே நடக்கும் மகா யுத்தமே முரசொலித்துக் கொண்டிருந்தது. ஆகையால் ராமசாமிக்கு, வர்த்தினி "ரிமைண்டர்" போட்டாள்.

'ராமசாமி... ஒன்னத்தான் ராமசாமி... இந்நேரம் நாம் ஆழ்வார்பேட்டை போயிருக்கணும்...'

இளம் டிரைவரான ராமசாமி, அலறியடித்து எழாமல், நிதானமாக எழுந்து, செய்தி பத்திரிகையை மடித்து வைத்துவிட்டு, வர்த்தினியிடமிருந்து சூட்கேஸை வாங்கிக் கொண்டு, வெளியேறப் போனவன், ஏழு கோணங்களில் எட்டு கோணல்களாய் நெளிந்தான். அவசர அவசரமாக சட்டையின் முதலாவது பொத்தானை மாட்டினான். சட்டைக் காலர் தற்செயலாகக் கூட நிமிர்ந்திருக்கக் கூடாது என்பதுபோல் இடது கையை வளைத்து பிடரியைத் தடவி விட்டபடியே