பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

127



சொல்றேன்னு தப்பா நினைக்காதக்கா... தனசிங் சார்! நீங்களும் தப்பா நினைக்கப்படாது. இந்த தனசிங் உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற அதிகாரி. ஆனாலும் நீங்க உட்காருவது வரைக்கும் உட்கார மாட்டார். அப்பேர்ப்பட்ட இவரப் பார்த்துட்டு குலை நடுங்கிப் போகிற டிரைவர் ராமசாமி, உங்களப் பற்றிக் கவலை படாமல், கால்மேல் கால்போட்டு அலட்சியமாய் உட்காருறான்... அவன் மட்டும் டிரைவர் சீட்ல இருக்காட்டால் இந்த தெருக்காரங்களுக்கு நீ ஆபீசரா. அவன் ஆபீசரான்னு சந்தேகம் வந்துடும்...'

'என்னடா ரவி... சின்ன வயசுல எங்கிட்ட வம்புக்கு வந்தது மாதிரியே இப்பவும் வாரியே... நாம எல்லாரும் அடிப்படையில் மனுசங்கடா... டில்லியில் இந்த மாதிரியெல்லாம் அந்தஸ்து பேதம் கிடையாது. மேலதிகாரிகிட்டே, பியூனே, சிகரெட் பற்றவைக்க லைட்டர் கேட்பான். அந்த அளவுக்கு ஒரு தோழமை...'

'இது டில்லி இல்ல அண்ணி... தமிழ்நாடு, கெஞ்சினால் மிஞ்சுவான் -- மிஞ்சினால் கெஞ்சுவான். தலையைப் பிடித்தா காலைப் பிடிப்பான் - காலைப் பிடித்தால் தலையைப் பிடிப்பான். நீங்க மாநில அதிகாரி. இருபது ஆபீசுகளை மேற்பார்வை செய்கிறவர். அவன் கேவலம் டிரைவர். ரொம்பத்தான் இடம் கொடுக்கிங்க. நீங்க பெரிய அதிகாரியா இருந்தாலும் அவனுக்கு பெண்ணுன்னு இளக்காரம்'.

இந்த மாதிரியான இனிய சந்தர்ப்பத்திற்காக ஏங்கி நின்ற தனசிங் புன்னகைப் பொங்கப் பேசினார். தன்னையும் இளக்காரப் பட்டியலில் சேர்த்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கையும் கூட. கணவனை எள்ளும் கொள்ளுமாகப் பார்த்த கீதாவிடம் பேசுவது போல், வர்த்தினிக்கு சேதி சொன்னார்.

'நீங்க நினைக்கிறது மாதிரி பெரிய பெரிய அதிகாரிகள ஆண் பெண்ணுன்னு பிரிச்சு பார்க்கிறது கிடையாது. அதனால இளக்காரமும் இல்ல. அடுத்ததெரு அபிராமி இருக்காங்களே. அவங்க பெல்லடிச்சால் சாப்பிடறவங்ககூட வாயைத் தொடச்சிக்கிட்டே உள்ளே போகணும். இல்லன்னா தண்ணி இல்லாக் காடுதான். நம்ம மேடத்துக்குத்தான் வெளுத்ததெல்லாம் பால்... பாலுல கள்ளிப் பால், எருக்கலைப் பால் இருக்கது தெரியல. இங்கே உள்ளவங்களுக்கு தராதரம் தெரியாது என்கிறதும் மேடத்துக்கு தெரியாது'.