பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அவள்…. அவளாக….


சாஸ்திரி பவனின் பின் தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குள் வந்த வர்த்தினி, வழக்கம் போல் பராக்குப் பார்க்காமல், வணக்கம் போட்ட ஊழியர்களுக்கு ஒரு விரலைக் கூட அசைக்காமல், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் கம்பீரமாய் ஊடுறுவி, அழுத்தம் திருத்தமாய் நடந்து தலைக்கு மேல் பாம்பாய் சுருண்ட சுழல் மெத்தை நாற்காலியில் சாய்வாய் உட்காராமல் அதை சாய்த்து உட்கார்ந்தாள். இந்த இடைக்கால மாற்றத்தில் இன்பம் இல்லையானாலும், ஒரு கம்பீரம். இவ்வளவு நாளும் இப்படி இல்லாமல் போனோமே என்கிற குற்றவுணர்வு. இதற்கு வட்டியும் முதலுமாய் கணக்குத் தீர்க்க வேண்டும் என்கிற வைராக்கியம். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு, தான் எந்த விதத்திலும் சளைத்தவலில்லை என்பதை காட்டத் துடிக்கும் கங்கணம்.

அந்தச் சமயம் பார்த்து கடைநிலை ஊழியரான கேசவன் கைகளில் ஒரு சுமை காகிதக் குவியலோடு வந்தார். வந்ததும் வராததுமாய் அப்படி வந்ததுக்கு விளக்கமும் வழங்கினார். உடையும் சரி, உடம்பும் சரி யூனிபாரம் அற்றவர்...

'எல்லாம் தீபாவளி லோன் விண்ணப்பங்க -- சீக்கிரமா கையெழுத்துப் போடுங்கம்மா. இன்னிக்குப் போனாத்தான், பி.ஏ.ஓ ஆபீஸ்ல பில் போடுவாங்களாம்'.

'இந்தா பாருங்க கேசவன் ஒங்களோட தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், எல்.டி.சி அட்வான்ஸ், டி.ஏ. அட்வான்ஸ், டிரான்ஸ்போர்ட் அட்வான்ஸ், பேங்க் கடன், கூட்டுறவு சங்கக் கடன், வீடு கட்டும் கடன், இதுங்களுல கையெழுத்துப் போடுறதுக்கு மட்டும்தான் இருக்கேன்னு நினைக்கிங்களா? இனிமே அந்த நினைப்பே வேண்டாம். நிர்வாக அதிகாரி மேஜையில வையுங்க... அவரு குறிப்பெழுதி அனுப்புவார்'.

'அவரு கையெழுத்து போடும் முன்னால அடுத்த தீபாவளி வந்துடும்மா'.

'இப்படி ஏடாகூடமா பேசினால், உங்கள ராமனாதபுரத்துக்கு மாற்ற வேண்டியதிருக்கும். அப்புறம்.. இதுக்கு மேல ஆபீசுக்கு வாரவங்கள என்னைப் பார்க்கச் சொல்லுங்க. நீங்க போகலாம்'.

'அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது...